சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் வீடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸார் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணிகளுக்குத் தேவையான ஊழியர்களைத் தேர்வு செய்வதற்கான தகுதித் தேர்வுகளை தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி செல்லமுத்து செயல்படுகிறார். இவர் போக 13 உறுப்பினர்களும் ஆணையத்தில் உள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு சென்னை பாடியில் உள்ள செல்லுமுத்துவின் வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புப் போலீஸ் குழு வந்தது. பின்னர் அவர்கள் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தத் தகவல் வெளியான அடுத்த சில நிமிடங்களில் தேர்வாணையத்தின் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு வேட்டை நடந்து வருவதாக தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்வாணைய உறுப்பினர்களான டி.சங்கரலிங்கம், டாக்டர் கே. லட்சுமணன், எம்.ஷோபினி, டாக்டர் சேவியர் ஜேசு ராஜா, டாக்டர் கே.எம்.ரவி, ஜி.சண்முக முருகன், கேகே ராஜா, டாக்டர் எஸ்.பன்னீர்செல்வம், வி.ரத்தினசபாபதி, டாக்டர் பி.பெருமாள்சாமி, டி.குப்புசாமி, ஜி.செல்வமணி ஆகியோரது வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது.
இவர்களில் சங்கரலிங்கத்தின் வீடு திருச்சியில் உள்ளது. அங்கு ரெய்டு நடந்து வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் 10 அதிகாரிகள் வரை சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. எனவே கிட்டத்தட்ட 150 அதிகாரிகள் வரை இந்த 14 பேரின் வீடுகளிலும் குவிந்து சோதனையில் ஈடுபட்டிருப்பதால் அரசு அலுவலக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
Post a Comment