ராஜீவ்காந்தி கொலை கைதிகளுக்கு மரண தண்டனை அளிக்க தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கு இன்று (28-ந் தேதி) சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி ஜனாதிபதியிடம் முருகன் உட்பட 3 பேரும் 2000-ம் ஆண்டில் கருணை மனு கொடுத்தனர். இந்த கருணை மனு 2011-ம் ஆண்டு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் 3 பேரும் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில், `11 ஆண்டுகள் காலதாமதமாக கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறோம். ஆயுள் தண்டனையையும் தாண்டி சிறையில் இருப்பதால் எங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை கடந்த செப்டம்பர் மாதம் ஐகோர்ட் நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்யநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். 3 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தாவிட்டனர். மேலும், இவர்களது மனுக்களுக்கு பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் எல்.கே.வெங்கட் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அந்த 3 பேரின் மனுவை விசாரித்தபோது சென்னை ஐகோர்ட்டு வளாகத்துக்குள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து கோஷங்கள் போட்டனர். எனவே இந்த வழக்கை வேறு மாநில ஐகோர்ட்டுக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, கொலையாளிகள் 3 பேருக்கும், மத்திய மாநில அரசுகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் முருகன் உட்பட 3 பேர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று (28-ந் தேதி) விசாரணைக்கு வருகிறது.
Post a Comment