கடந்த 2000-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டின் போட்டியின் பாதியிலேயே தெண்டுல்கர் கேப்டன் பதவியை விட்டு விலக முன்வந்த போது, அவரது மனைவி அஞ்சலி தலையிட்டு அவரது முடிவை மாற்றியதாகஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் செயலாளர் ஜெய்வந்த் லீலே கூறியுள்ளார்.
கிரிக்கெட் நிர்வாகத்தில் தனது அனுபவத்தை ஜெய்வந்த் லீலே புத்தகமாக எழுதியுள்ளார்.
அதில், ''1999-2000-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 2 டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக சச்சின் தெண்டுல்கர் இருந்தார். முதலாவது டெஸ்ட் மும்பையில் நடந்தது. இதில் 3 நாட்களிலேயே தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று விட்டது. 2-வது நாளிலேயே மிகப்பெரிய வித்தியாசத்தில் இந்தியா தோற்பது உறுதியாகி இருந்தது.
இந்திய அணி குறித்தும் குறிப்பாக தெண்டுல்கரின் கேப்டன்ஷிப் பற்றியும் கடுமையான விமர்சனங்கள் வந்தன. இதனால் தெண்டுல்கர் வேதனையுடன், பதற்றமாக காணப்பட்டார்.
2-வது நாள் ஆட்டம் முடிந்த பிறகு மாலையில் அவர் என்னிடம் ஒரு கடிதத்தை கொடுத்தார். கேப்டன் பதவியை விட்டு விலகுவதாக அவர் எழுதியிருந்ததை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டேன்.
ஏனெனில் 2 நாள் ஆட்டம் முடிந்து இருக்கிறது. சில தினங்களில் இன்னும் ஒரு டெஸ்ட் தொடங்கப் போகிறது. இத்தகைய சூழலில் அவரின் விலகல் கடிதம் எங்களை தர்ம சங்கடத்திற்குள்ளாக்கியது.
தனது கேப்டன்ஷிப் மோசமானதாக இருக்கிறது என்று அவர் கருதினால் கூட, டெஸ்ட் தொடர் முடியும் வரை காத்திருந்து விட்டு அதன் பிறகு ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்க வேண்டும். அவரை சமாதானப்படுத்த நாங்கள் முயற்சித்தோம். அதற்கு அவர், `எல்லாம் போதும் என்னை விட்டு விட்டுங்கள்' என்று கூறினார். அவர் மனரீதியாக சோர்வடைந்திருந்தார். அதில் இருந்து மீள அவர் விரும்பினார். அது எங்களுக்கு ஒரு சிக்கலான சூழலாக இருந்தது.
கடைசி முயற்சியாக நானும், ரவி சாஸ்திரியும், தெண்டுல்கரின் மனைவி டாக்டர் அஞ்சலியிடம் தனித்தனியாக இது பற்றி பேசினோம். `அவருக்கு கேப்டன் பதவியில் நீடிக்க விருப்பம் இல்லை என்றால் இப்போது கூட ராஜினாமா செய்யலாம்.
ஆனால் ஒரு தொடர் முடிந்த பிறகு விலகுவது தான் பாராட்டப்படக்கூடியதாக இருக்கும். எனவே இந்த டெஸ்ட் தொடர் முடியும் வரை கேப்டனாக நீடிக்க சொல்லுங்கள்'என்று அஞ்சலியிடம் யோசனை கூறினேன்.
அதன் பிறகு அவரது மனதை யார் மாற்றினார்கள் என்பது எனக்கு சரியாக தெரியாது. பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டிலும் தெண்டுல்கர் அணிக்கு தலைமை தாங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 2-வது டெஸ்டிலும் இந்திய அணி தோற்றது. அதன் பிறகு புதிய கேப்டனாக சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டார்.
தெண்டுல்கர் ஒரு வீரராக ஜாம்பவனாக விளங்கினாலும், `வெற்றிகரமான கேப்டன்' என்று அவரால் நிரூபிக்க முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக அவர் கேப்டனாக இருந்த போது அவரிடம் பலமுறை பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அப்போது அவரது பெரிய பிரச்சினை என்னவென்றால், பலரது யோசனைகளையும் கேட்பார். ஆனால் அவர் உண்மையிலேயே தான் விரும்பியபடியே முடிவுகளை எடுத்திருந்தால் கேப்டன்ஷிப்பில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிப்பார்'' என்று கூறியுள்ளார்.
Post a Comment