தமிழகம் முழுவதும் நிலவும் மின்சார தட்டுப்பாட்டைப் போக்க, 2 மணி நேர மின் தடையை, 3 மணி நேர மின் தடையாக அமல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. ஓரிரு நாளில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம். பருவமழை துவங்கியுள்ளதால், காற்றாலை உற்பத்தி அதிகரிக்கக்கூடும். அவ்வாறான நிலையில், மின் தடையில் இருந்து விலக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தில், வீடு, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என, இரண்டு கோடி மின் இணைப்புகள் உள்ளன. மொத்த உற்பத்தி தேவையான, 10 ஆயிரம் மெகாவாட்டில், தற்போது, 8,500 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது. தொழிற்சாலைகளுக்கு, 3,500 மெகாவாட் மின்சாரம் போக, மீதமுள்ளவற்றில் வீடுகளுக்கும், வணிக பயன்பாட்டுக்கும், இலவச மின்சாரத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. 2,500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைத்தால், அனைத்து பயன்பாட்டுக்கும் எந்தவித தடையுமின்றி வழங்க முடியும். தற்போது, மின் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில், இலவச மின்சாரத்தையும், அனுமதி வாங்காமலும், தொழிற்சாலை மற்றும் சொந்த பயன்பாட்டுக்கு மின்சாரத்தை திருடி வருகின்றனர். சில இடங்களில், அதிகாரிகளும் இதற்கு துணை போகின்றனர். மின் திருட்டு தொடர்வதால், மின்சார தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது.
நாள்தோறும் இரண்டு மணி நேர மின் தடை அமலில் உள்ள நிலையில், தற்போது, 4 முதல் 5 மணி நேரம் மின் தடை ஏற்படுத்தப்படுகிறது. அவற்றை, மூன்று மணி நேர தடையாக முறைப்படுத்த, தமிழக அரசிடம் மின்வாரியம் அனுமதி கேட்டுள்ளது. சென்னையில் ஒரு மணி நேரம் என்பதை, இரண்டு மணி நேரமாக்கவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. எண்ணூர் அனல் மின் நிலையத்தில், இயந்திர கோளாறால், அங்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் இருந்து எப்போதும் கிடைக்கும், 840 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், உற்பத்தியில் தடையில்லை. காற்றாலை உற்பத்தி குறைந்ததாலும், மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளுக்கு, 40 சதவீத மின் தடை ஏற்படுத்தப்பட்ட நிலையில், தற்போது, 20 சதவீத மின் தடை அமலில் உள்ளது. அவற்றை, 30 சதவீதமாக உயர்த்தவும் மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு, 2 மணி நேரம் என்பதை, 3 மணி நேர மின் தடையாக அறிவிக்க, மின்வாரியம் அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. ஓரிரு நாளில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம். வெளி மாநிலங்களிலும், மின் உற்பத்தி குறைந்து வருவதால், மின் தடை, காற்றாலை உற்பத்தி கிடைக்கும்பட்சத்தில், அதன் மூலம் நிலைமையை சமாளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
Post a Comment