மருத்துவ துறை வளர்ச்சியின் காரணமாக, மனிதனின் சராசரி வயது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2009ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்தியர்களின் சராசரி வயது 69 ஆக உள்ளது. இந்நிலையில், ஆரோக்யமான உடல்நலத்துடன் 150 ஆண்டுகளைக் கடந்து வாழ்வதற்கான மாத்திரையை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது அடுத்த 5 ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் யுனிவர்சிட்டி பேராசிரியர் பீட்டர் ஸ்மித் கூறுகையில், மனிதனுக்கு வயதாவதை ஒத்திப்போடும் மாத்திரையை கண்டுபிடிப்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 150 ஆண்டுகளைத் தாண்டி வாழ முடியும். அதாவது வயதாவதைத் தடுக்கும். இதுமட்டுமல்லாமல் நோய்நொடியின்றி ஆரோக்யமாக வாழவும் இந்த மாத்திரை உதவும். இந்த மாத்திரை உடலில் உள்ள செல்களை புதுப்பித்து உற்சாகமுடன் இருக்க வகை செய்யும் என்றார்.
ஹார்வர்டு யுனிவர்சிட்டி பேராசிரியரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமான டேவிட் சின்க்ளெய்ர் கூறுகையில், மனிதன் வயதாவதற்கு உடலில் உள்ள ஜீன்கள் குழுவே முக்கிய காரணமாக உள்ளது. அவற்றை புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பை நமது உடல் பெற்றிருக்கிறது. ரெட் ஒயினில் உள்ள ஒரு பொருள் ரெஸ்வரேட்டல் என்ற தாவரத்திலும் உள்ளது. இதை ஈஸ்ட், புழு, ஈ மற்றும் எலி ஆகியவற்றில் செலுத்தியபோது அதன் வாழ்நாள் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு மனிதனின் வாழ்நாளை அதிகரிப்பதற்கான மாத்திரையை தயாரிக்க முயற்சி நடைபெற்று வருகிறது என்றார்.
Post a Comment