அப்பாடா... ஒரு வழியா வந்துட்டார்யா வைகைப் புயல் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், 'என் படத்தில் வடிவேலுவா.... இல்லவே இல்லை,' என்று மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் சுந்தர் சி.
கடந்த சட்டமன்ற தேர்தலில் வடிவேல் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். விஜயகாந்தை காய்ச்சி எடுத்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் அதிமுகவை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகிவிட்டார்.
அவரை யாரும் புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்யக் கூடாது என வாய்மொழி உத்தரவு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் வடிவேலுவோ நானாகத்தான் சினிமாவை ஒதுக்கி வைத்துள்ளேன் என்று கூறிவந்தார். எனவே வடிவேலு மீண்டும் நடிப்பாரா? என சினிமா ரசிகர்களின் மனதில் தொடர்ந்து கேள்வி எழுந்து வந்தது. வடிவேலு இல்லாத தமிழ் படங்கள் படு வறட்சியாகவே காணப்படுகின்றன.
இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை வடிவேலு ஆரம்பித்துவிட்டார் என்றும் சுந்தர்.சி இயக்கும் படத்தில் வடிவேலு நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் பரவின.
ஆனால் இதனை மறுத்துள்ளார் சுந்தர் சி. இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு நடிப்பதாக வெளிவந்த செய்திகள் தவறானவை. எதுவுமே இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அனைத்துமே வதந்திதான்," என்று கூறியுள்ளார்.
Post a Comment