டாஸ்மாக் மதுக் கடைகளில் விற்பனை பெருமளவில் குறைய விற்பனையாளர்கள் காரணமல்ல. மாறாக, குடிமக்களுக்கு ஏற்ற சரக்குகளை விற்காமல், மது தயாரிக்கும் நிறுவனங்களின் சரக்குகளை மட்டுமே விற்பதால்தான் விற்பனை சரிந்துள்ளது என்று திமுக தொழிற்சங்கமான தொமுச பேரவை கூறியுள்ளது.
டாஸ்மாக் மதுக் கடைகளில் விற்பனை கிடுகிடுவென சரிந்துள்ளது. இதனால் தமிழக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. விற்பனை குறைய என்ன காரணம் என்பது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சரியாக விற்பனை செய்யாத விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் தொமுச பேரவை தலைவர் செ.குப்புசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் விற்பனைக் குறைவுக்கு என்ன காரணம் என்பது குறித்து அவர் புது விளக்கம் அளித்துள்ளார். அந்த அறிக்கை:
தமிழக அரசால் நடத்தப்படும் மதுபான கடைகளில், 17 சதவீதம் அதிகரித்த மது விற்பனை 12 சதவீதமாக குறைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விற்பனை குறைவுக்கு காரணம், அரசின் இயலாமை தான்; தொழிலாளர்கள் அல்ல.
தமிழகத்தில் 7,434 சில்லரை விற்பனை நிலையங்கள் டாஸ்மாக் நிறுவனத்தால் 31 மாவட்டங்களில் செயல்படுகிறது. தேவையான சரக்குகள் மாவட்ட கிடங்குகள் மூலம் அனுப்பப்படுகிறது. தேவை அடிப்படையில் சரக்குகளை அனுப்பாமல் இருப்புக்கு ஏற்பவும், அரசை ஆட்டிப் படைக்கும் மொத்த வியாபாரிகள் நிர்ப்பந்தத்துக்கு ஏற்பவும் வினியோகம் செய்யப்படுகிறது.
பொது மக்கள் விரும்பும் சரக்குகளை அனுப்பாமல், இருப்பு அடிப்படையில் தேவையற்ற விற்பனை ஆகாத மது வகைகள் வினியோகம், வற்புறுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவது தான் விற்பனை குறைவுக்கு அடிப்படை காரணம் ஆகும். இதற்கு விற்பனையாளர்களோ, மேற்பார்வையாளர்களோ காரணம் அல்ல. முழுக்க முழுக்க அரசும் உயர்மட்ட அதிகாரிகளுமே காரணம் ஆகும்.
பார்களில் போலி சரக்கு விற்பனை கட்டுப்படுத்த, எந்தவித பாகுபாடும் இன்றி முறையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் குப்புசாமி.
Post a Comment