'ரசிகர்கள் அவரவர் விருப்பப்பட்ட கட்சிக்கு ஆதரவளிக்கலாம். ஆனால் அவர்கள் எங்கிருந்தாலும் தேவைப்படும்போது 'அழைத்துக் கொள்வேன்'!'
-ரசிகர்களின் அரசியல் விஷயத்தில்ரஜினியின் நிலைப்பாடு இதுதான்.
எனவே திமுக, அதிமுக என்ற கட்சிக் கரைகளைக் கடந்து, தங்களின் சூழலுக்கேற்ப ரஜினி ரசிகர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
இந்த உள்ளாட்சித் தேர்தலில், சென்னை ரஜினி மன்றத்தின் முக்கிய பிரமுகரான சைதை ரவி, தனது ஆதரவை சென்னை மேயர் பதவிக்குப் போட்டியிடும் சைதை துரைசாமிக்கு தெரிவித்துள்ளார். சைதை ரவியுடன் உள்ள ஏராளமான ரசிகர்களும் துரைசாமிக்கே தங்கள் ஆதரவு என்றதோடு, களத்தில் இறங்கி வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தலைமை மன்றத்துக்கு முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெற்றுக் கொண்டுள்ளார் ரவி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ரவி கூறுகையில், "அண்ணன் சைதை துரைசாமி அவர்களை குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளராக நாங்கள் பார்க்கவில்லை. அதையெல்லாம் தாண்டிய மரியாதைக்குரியவர் அவர். எங்கள் பகுதிக்கு நாங்கள் கேட்காமலே அவர் செய்து கொடுத்துள்ள வசதிகள் கொஞ்சமல்ல. அடிப்படை பிரச்சினை முதல் உயர்கல்வி வரை எந்த உதவி வேண்டுமானாலும் உடனடியாக நாங்கள் போய் நிற்பது சைதை துரைசாமியிடம்தான். அப்படிப்பட்ட மனிதர் சென்னை மேயரானால், இந்த நகருக்கே புதிய பொலிவு கிடைக்கும். மக்களின் மேயராக சைதையார் திகழ்வார்," என்றார்.
ரஜினியைச் சந்தித்து ஆசி பெற அனுமதி கோரியுள்ளார் சைதை துரைசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment