உள்ளாட்சி தேர்தலில், வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில், பா.ம.க., வேட்பாளர்கள் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி, மாவட்ட மற்றும் ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மக்கள் அதிருப்தியைத் தவிர்க்க புதிய திட்டம் வகுத்துள்ளனர்.
வட மாவட்டங்களில் பா.ம.க., கோட்டை என அழைக்கப்பட்ட சேலம், தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில், புறநகர் பகுதியில், பா.ம.க., ஆதரவாளர்கள் அதிகமாக வசித்தாலும், நகரப்பகுதியில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க., சார்பில் தனித்துப் போட்டியிட, பல இடங்களில் வேட்பாளர்கள் தயங்கினர்.
வட மாவட்டங்களில், பா.ம.க., ஆதரவாளர்களை விட, பிற சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கும் பேரூராட்சி, ஒன்றியங்களில் பா.ம.க., சார்பில் மாம்பழ சின்னத்தில் போட்டியிட வேட்பாளர்கள் தயக்கம் காட்டினர். மாம்பழ சின்னத்தில் போட்டியிட்டால் ஓட்டு வாங்குவது கடினம் என, நிர்வாகிகள் பலர் தலைமைக்கு தெரிவித்துள்ளனர்.
எனவே, பிற சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பேரூராட்சி மற்றும் ஒன்றியத்தில், அவர்கள் ஓட்டுகளை கவர, பா.ம.க.,வினர் புது யுக்தியை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, பிற சமூகத்தினர் அதிகம் வசிக்கும் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி வார்டுகளில், அப்பகுதியில் மக்கள் செல்வாக்கு மிகுந்த வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து, பா.ம.க., நிர்வாகிகள் அவர்களை சுயேச்சையாக மனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர்.
சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும், பா.ம.க., ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பின், அவர்களை, பா.ம.க., ஆதரவாளர்கள் என வெளியுலகுக்கு தெரியப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
அதற்கேற்ப, உள்ளாட்சி தேர்தலில் பிற சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில், பா.ம.க., ஆதரவாளர்கள் பலர் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். பா.ம.க.,வின் இந்த புதிய யுக்தி வாக்காளர்களிடம் எடுபடுமா, வெற்றிக்கு கைகொடுக்குமா என்பது, தேர்தல் முடிவுக்குப் பின்பே தெரியவரும்.
(dm)
Filed under: Hot News Tagged: உள்ளாட்சித் தேர்தல் 2011, தமிழ்நாடு செய்திகள்
Post a Comment