புதுடில்லி: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. கடந்த போட்டியில் வென்ற இந்திய அணி, மீண்டும் ஆதிக்கம் செலுத்த காத்திருக்கிறது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. ஐதராபாத்தில் நடந்த முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடக்கிறது.
தோனி நம்பிக்கை:
முதல் போட்டியில் சோபிக்கத்தவறிய பார்த்திவ் படேல், அஜின்கியா ரகானே ஜோடி இன்று சூப்பர் துவக்கம் அளிக்க வேண்டும். மூன்றாவது வீரராக களமிறங்கும் கவுதம் காம்பிர், சொந்த ஊரில் சாதித்துக் காட்டினால் நல்லது. விராத் கோஹ்லி பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா நல்ல "பார்மில்' இருப்பது பலம். ஐதராபாத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த இவர்கள், இன்றும் கைகொடுக்கும் பட்சத்தில் மீண்டும் இமாலய இலக்கை பதிவு செய்யலாம். ரவிந்திர ஜடேஜா, "ஆல்-ரவுண்டராக' எழுச்சி கண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
பலமான சுழல்:
அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் இல்லாத நிலையில், அஷ்வின், ரவிந்திர ஜடேஜா உள்ளிட்ட இளம் வீரர்கள் முதலாவது போட்டியில் சாதித்து காட்டினர். இவர்களது சுழல் ஜாலம் இன்றும் தொடர வேண்டும். பிரவீண் குமார் வேகப்பந்துவீச்சில் நம்பிக்கை அளிப்பது பாராட்டுக்குரியது. வினய் குமார், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் நல்லது. உமேஷ் யாதவ் இன்றும் சாதிக்கலாம்.
பெல் வாய்ப்பு:
இங்கிலாந்து அணி எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் போட்டியில் கேப்டன் அலெஸ்டர் குக் மட்டும் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். இவரது பொறுப்பான ஆட்டம் இன்றும் தொடர்ந்தால் நல்லது. துவக்க வீரராக கீஸ்வெட்டர் எழுச்சி பெற வேண்டும். கெவின் பீட்டர்சன் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில் ரன் வேட்டை நடத்தலாம். "மிடில்-ஆர்டரில்' ஜோனாதன் டிராட், ரவி போபரா, பேர்ஸ்டோவ், சமித் படேல், டிம் பிரஸ்னன் உள்ளிட்டோர் அதிரடி காட்டும் பட்சத்தில், நல்ல ஸ்கோரை பெறலாம். முதல் போட்டியில் விளையாடாத இயான் பெல், இன்று களமிறங்கலாம்.
பிரஸ்னன் கவனம்:
ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்ட திறமையான அனுபவ வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இங்கிலாந்து அணி திணறுகிறது. டிம் பிரஸ்னன், ஸ்டீவன் பின், டெர்ன்பாக் உள்ளிட்ட வேகங்கள் எழுச்சி பெறும் பட்சத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்கலாம். சுவான் தனது சுழல் ஜாலத்தை காட்டினால் நல்லது.
வெற்றி நடையை தக்கவைத்துக் கொள்ள இந்தியாவும், முதல் வெற்றியை பதிவு செய்ய இங்கிலாந்தும் காத்திருப்பதால், இன்று கடும் போட்டியை எதிர்பார்க்கலாம்.
இரண்டாவது போட்டி நடக்க உள்ள டில்லி, பெரோஷா கோட்லா மைதானம் சர்ச்சைக்குரியது. இங்கு 2009ல் நடந்த இந்தியா, இலங்கை இடையிலான போட்டி, மோசமான ஆடுகளம் காரணமாக கைவிடப்பட்டது. இம்முறை ஆடுகளம் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ., ஆடுகள கமிட்டி தலைவர் வெங்கட் சுந்தரம் கூறுகையில்,""ஆடுகளம் மந்தமாக இருக்காது. "பேட்' செய்யும் அணி குறைந்தது 300 ரன்கள் எடுக்கலாம். இம்முறை ஒரு குறையும் இருக்காது,"என்றார்.
இம்மைதானத்தில் இரு முறை மோதியுள்ள இந்தியா (2006), இங்கிலாந்து (2002) அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றன. கடந்த 2008ல் இங்கு நடக்க இருந்த போட்டி, மும்பை குண்டுவெடிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
டில்லியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லை என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நல்ல வெயில் அடிக்கும் என்பதால், போட்டியை ரசிகர்கள் முழுமையாக கண்டு களிக்கலாம்.
Post a Comment