இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
டெல்லியில் நடந்து முடிந்த இப்போட்டியில், இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இப்போட்டியில், 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 36.4 ஓவர்களிலேயே வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது.
இளம் வீரர் வீராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 112 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இது, ஒருநாள் போட்டிகளில் அவருக்கு 7-வது சதமாகும்.
மறுமுனையில் கவுதம் கம்பீர் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் குவித்து, அணிக்கு உறுதுணையாக இருந்தார்.
துவக்க ஆட்டக்காரர்களான பர்த்திவ் பட்டேல் 12 ரன்களையும், ரஹனே 14 ரன்களையும் எடுத்திருந்தனர்.
முன்னதாக, இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்களை எடுத்தது.
அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான குக், கீஸ்வெட்டர் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, டிராட் - பீட்டர்சன் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது.
டிராட் 34 ரன்களையும், பீட்டர்சன் 46 ரன்களையும் சேர்த்தனர். அதன்பின் களமிறங்கிய போபரா 36 ரன்களையும், பேர்ஸ்டோ 35 ரன்களையும் எடுத்தனர். படேல் 42 ரன்கள் எடுத்து, அணியின் ரன் எண்ணிக்கையை ஓரளவு உயர்த்தினார். அதைத் தொடர்ந்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இந்திய தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய வினய் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். யாதவ் 2 விக்கெட்டுகளையும், பிரவீன் குமார், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலையில் உள்ளது.
Post a Comment