News Update :
Home » » அரவான் - கள்வன் பாதி ! காவலன் பாதி ...!

அரவான் - கள்வன் பாதி ! காவலன் பாதி ...!

Penulis : karthik on Saturday 3 March 2012 | 10:05

 
 

பத்து வருடங்களில் நான்கே படங்கள் இயக்கியிருந்தாலும் வணிக ரீதியான வெற்றி , தோல்விகளை தாண்டி நல்ல பெயரை பெற்றிருக்கும் இயக்குனர் வசந்தபாலன் ... இரண்டு வருடங்களுக்கு முன்னால் இதே மாதத்தில் அங்காடி தெருவால் அனைவரையும் அசர வைத்தவர் இப்போது பீரியட் படம் அரவானில் ஆதி - பசுபதியுடன் இணைந்து வந்திருக்கிறார் ...

சு.வெங்கடேசன் எழுதி சாகித்திய அகாடமி விருது பெற்ற " காவல் கோட்டம் " படத்தின் ஒரு பகுதி கதையே " அரவான் " ... நாவலுக்கு கிடைத்த இருவேறு மாதிரியான விமர்சனங்களே படத்திற்கும் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை ...

களவை குலத்தொழிலாக கொண்ட கூட்டத்தின் தலைவன் பசுபதி ... ராணியின் நகையை எவனோ திருடி விட பழி பசுபதியின் ஊரின் மேல் விழுகிறது , அதை துடைக்க உண்மையான திருடன் ஆதியை கண்டுபிடிக்கும் பசுபதி அவன் களவாடும் திறமையில் ஈர்க்கப்பட்டு தன்னுடன் சேர்த்துக்கொள்கிறான் ... தன் தங்கை ஆதியின் மேல் காதல் வயப்பட அவனுடைய பூர்வீகத்தை வினவும் பசுபதி ஆதி ஏற்கனவே திருமணம் ஆனவன் என அறிகிறான் , அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் ஒரு கூட்டம் ஆதியை பலியாள் என்று சொல்லி அடித்து கூட்டி செல்கிறது ... ஆதியின் பின்னணி என்ன ? பசுபதியால் அவனை மீட்க முடிந்ததா ? என்பதை இடைவேளைக்கு பிறகு விறுவிறுப்பாக விளக்கியிருக்கிறார்கள் ...


பசுபதி முறுக்கேறிய தோள்களுடனும் , பழுப்பேறிய பற்களுடனும் அந்த காலத்து களவாணியாக கண்முன் நிற்கிறார் ... முன்பாதியில் முழுவதும் இருந்து பின்பாதியில் காணாமல் போனாலும் க்ளைமாக்ஸ் காட்சியில் பசுபதி பிரமாதமாய் நடித்திருக்கிறார் ...

ஆதிக்கு உயரமும் , உடற்கட்டும் சீரியசாக பொருந்தும் அளவிற்கு முகம் ஏனோ பொருந்தவில்லை ... படம் ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்தே வந்தாலும் இரண்டாவது பாதி முழுவதும் கதை இவரை சுற்றியே நகர்கிறது. படம் முடிந்து வெளியே வரும் போது தன் கதாபாத்திரத்தை மனதில் பதிய வைத்ததே ஆதியின் வெற்றி ...


ஆதிக்கேற்ற ஜோடியாக தன்ஷிகா கட்சித பொருத்தம் ... பரத் சில சீன்களே வந்தாலும் சிலிர்க்க வைக்கும் நடிப்பு ... அஞ்சலி அங்காடிதெருவின் நன்றிகடனுக்காக நடித்திருப்பார் போல , இவரின் உடல் அளவிற்கு கேரக்டரில் வெயிட்டே இல்லை ... பாளையத்து ராஜா , மாத்தூர்காரனாக வரும் கரிகாலன், தேவதாசியாக நடித்திருக்கும் ஸ்வேதா மேனன் , சின்ன ராணி , ஆதியின் நண்பனின் மனைவி போன்றோரும் நம்மை கவர்கிறார்கள்.

படத்தின் முக்கிய பலங்களான கலையும் , ஒளிப்பதிவும் 18 ஆம் நூற்றாண்டை நம் கண்முன் நிறுத்துகின்றன ... ஒளிப்பதிவாளர் சித்தார்த்திற்கு இந்த படம் நல்ல ப்ரேக் ... அறிமுக இசையமைப்பாளர் கார்த்திக்கின் இசையில் நிலா நிலா, களவு பாடல்கள் முனுமுனுக்க வைத்தாலும் பின்னணி இசை பயங்கர மைனஸ் ... ஒரே சத்தம் தான் திரும்ப திரும்ப கேட்கிறது ...

சென்ற படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதை களனை தேர்ந்தெடுத்த இயக்குனரின் துணிச்சல் , சரித்திர நாவலை படமாக்குவதற்கு மேற்கொண்ட முயற்சி ,பீரியட் படம் என்றதும் செயற்கை முலாம் பூசாமல் உடையலங்காரம், காட்சியமைப்பு உட்பட அனைத்திலும் காட்டப்பட்ட யதார்த்தம் , பாத்திர தேர்வு , கள்வர்கள் பற்றியும் , களவாடும் விதம் பற்றியும் சொல்லப்பட்ட நுணுக்கமான தகவல்கள் , பரத் எப்படி கொலை செய்யபட்டான் என்பதை ஆதி துப்பறிவதன் பின்னணியில் பின்னப்பட்ட சுவாரசியமான இரண்டாம் பாதி , அதன் முடிவில் ஏற்படும் எதிர்பாராத திருப்பம் , நரபலியே கூடாதென்னும் கதை , கள்வர்களையே காவலர்களாய் மாற்றிய பாசிடிவ் க்ளைமாக்ஸ் இவையெல்லாம் அரவானை அண்ணாந்து பார்க்க வைக்கின்றன.


சாமி கும்புடுகிறார்கள், களவுக்கு போகிறார்கள் , ஆடி பாடுகிறார்கள் இப்படியே திரும்ப திரும்ப வரும் ரிப்பீட்டட் காட்சிகள் , கதைக்குள் போகாமல் களவுக்குள் மட்டும் போன முதல் பாதி , நிறைய காட்சிகளில் ஆண்கள் மேலாடை இல்லாமலோ , பெண்கள் உள்ளாடை இல்லாமலோ இருந்திருந்திருந்தால் பீரியட் படம் என்பதையே மறக்கடிக்க வைக்கும் வசனங்கள் , திணிக்கப்பட்ட பாடல்கள் மற்றும் சிங்கம்புலியின் காமெடி , கிராபிக்ஸ் காட்சிகள் ,

ஒரு ஊரே பலி கொடுக்க தேடிக்கொண்டிருக்கும் போது ஏதோ ஒன்றுமறியாத சின்ன பையன் போல உலா வரும் ஆதியின் பாத்திர படைப்பு , ஆதிக்கு பதில் ஏற்கனவே அவன் நண்பனை பலி கொடுத்த பின்னரும் ஆதியையும் பலி கொடுக்க எந்த வித லாஜிக்கும் இல்லாமல் ஊர் துணிவது, மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஜெயிப்பதற்காக தன்னையே பலி கொடுத்த அரவான் ஏற்படுத்திய பாதிப்பை ஏற்படுத்தாமல் பெயரில் மட்டுமே அதை தாங்கியிருப்பது போன்ற தோற்றத்தை கொடுப்பது, இரு விதமான கதைகளை சொல்ல முற்பட்ட திரைக்கதை உத்தி இவையெல்லாம் அரவானை பலி கொடுக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் : 44
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger