அண்மையில் நண்பன் திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. மதுரையில் நண்பன் திரைப்படம் திரையிடப்பட்டிருக்கும் தங்கரீகல் தியேட்டருக்கு நடிகர் விஜய் இன்று வருகை தந்தார். முன்னதாக விமான நிலையத்தில் அவருக்கு நடிகர் விஜய் மன்ற மதுரை மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.தங்கபாண்டி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் வாழ்த்து கோஷமிட்டனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தங்கரீகல் தியேட்டருக்கு வந்தார். அவருக்கு தாரை தப்பட்டை முழங்க தியேட்டர் நிர்வாகம் சார்பிலும், ரசிகர்கள் சார்பிலும் வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து நடிகர் விஜய் தியேட்டருக்குள் சென்று ரசிகர்கள் முன்னிலையில் நண்பன் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் கேக் வெட்டினார். பின்னர் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு விஜய் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- பல்வேறு படங்களில் நடித்துள்ளீர்கள். நண்பன் படம் நடித்து முடித்த பின்பு மதுரைக்கு வந்த அனுபவம் எப்படி இருக்கிறது?
பதில்:- பல தடவை மதுரைக்கு வந்துள்ளேன். நண்பன் ரிலீசுக்கு பின்பு சந்திக்கும் ரசிகர்களை நண்பர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். திரைப்படத்தின் வெற்றியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
குடும்பத்தில் தாய்-தந்தை, மனைவி, மாமன், மச்சான் என எல்லோரும் இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் சில விஷயங்களை சொல்ல முடியாது. ஆனால் நண்பர்களிடம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். யாரும் இல்லாமல் இருந்து விடலாம், நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. நண்பன் திரைப்படத்தில் ஒரு டயலாக்கை சொல்வேன். பிடித்த தொழிலை தேர்ந்தெடுத்து அதில் திறமையாக விடா முயற்சியுடன் ஈடுபட்டால், வெற்றி கிடைக்கும்.
இந்த டயலாக்கை நீங்களும் பின்பற்றி உங்கள் தொழிலில் நம்பர்-1 ஆக வரவேண்டும் என்பதே எனது விருப்பம். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனது பெற்றோர் என்னை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டனர். ஆனால் பல போராட்டங்களுக்கு பிறகு நான் சினிமா துறைக்கு வந்தேன்.மதுரையில் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு அலாதியானது, மறக்க முடியாதது.
கேள்வி:-நண்பன் படத்தில் புது டீம் அமைத்து பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?
பதில்:- நன்றாகவே இருந்தது. சக நடிகர்களான ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஏற்கனவே எனக்கு நெருங்கிய நண்பர்கள். இதனால் நண்பன் படத்தில் நடிப்பதில் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை.
கேள்வி:- இந்தியில் அமீர்கான் நடித்த கேரக்டரில் நடித்துள்ளீர்கள். அமீர்கான் நடித்த காட்சிகளை பார்த்தீர்களா?
பதில்- படத்தை ஒரு தடவை பார்த்தேன். படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பு அமீர்கான் நடித்த காட்சிகளை பார்த்தேன். பின்னர் என்னுடைய பாணியில் நண்பன் படத்தில் நடித்துள்ளேன்.
கேள்வி:- 50க்கும் மேற்பட்ட கதாநாயகிகளுடன் நடித்துள்ளீர்கள். அதில் உங்களுக்கு பிடித்த கதாநாயகி யார்?
பதில்:- சிம்ரன்.
பின்னர் நண்பன் திரைப்படத்தின் ஒரு பாடலை விஜய் பாடினார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய விசில் சத்தம் தியேட்டரை அதிர வைத்தது. அதன்பிறகு தியேட்டர் மாடிக்கு சென்ற விஜய், அங்கிருந்து ரசிகர்களை பார்த்து கைசையத்தார். விஜய்யின் வருகையையொட்டி தியேட்டரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Post a Comment