அண்ணா நூற்றாண்டு நூலக கட்டடம் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 200 கோடியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
அவ்வாறு மாற்ற வேண்டிய அவசியம் ஏதும் எழவில்லை. மக்கள் வரிப்பணம், 200 கோடி ரூபாயில், உயர் கல்விக் கட்டடங்கள் நிறைந்துள்ள பகுதியில், நூலகம் அமைந்துள்ளதால், கல்வியாளர்கள் எளிதில் வந்து செல்கின்றனர்.
புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் போல இந்த நூலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எந்த குற்றச்சாட்டும் எழவில்லை. அண்ணாவின் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே அவரது பெயரில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைந்திருப்பது பொருத்தமானது.
குழந்தைகள் உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்றை, அரசு அமைக்க விரும்பினால், ஏற்கனவே உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையை மேம்படுத்தியிருக்கலாம். திருமழிசையில் ரூ.2,160 கோடியில் அமைய உள்ள துணை நகரத்திலோ அல்லது தமிழகத்தின் பிற நகரங்களிலோ புதிதாக மருத்துவக் கல்லூரியுடன் கூடிய குழந்தைகள் மருத்துவமனையை அமைக்கலாம்.
கடந்த ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என்பதற்காகவே இதை மாற்றுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஜனநாயகத்தில் ஆட்சிகள் மாறுவது இயற்கை. முந்தைய ஆட்சியின் திட்டங்களை மாற்றுவதன் மூலம் மக்களின் பணம்தான் விரயமாகிறது.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மக்கள் பயன்படுத்துகிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். வேண்டுமானால் இந்த நூலகத்தை பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தலாம். கோயம்பேடு பேருந்து நிலையம் இரண்டு ஆட்சிகளிலும் நிறைவேற்றப்பட்ட திட்டமாகும். எனவே, மக்கள் aநலன் கருதி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மாற்றுவது கண்டிக்கத்தக்கது-கிருஷ்ணசாமி:
இந் நிலையில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவது கண்டிக்கத்தக்கது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், திமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு கைவிடுவது நல்லதல்ல. நூலகத்தை மருத்துவமனையாக்குவது என்பது தவறான அணுகுமுறை. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக்கும் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நூலகத்தை மருத்துவமனையாக்குவது நடைமுறைக்கு சாத்தியமாகதத் திட்டம்.
5,000 பேர் அமர்ந்து படிக்கக் கூடிய ஒரு நூலகத்தை, அதுவும் செயலுக்கு வந்து 8 மாத காலத்தில், அப்படியே குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவோம் என்று இன்றைய அதிமுக அரசு அறிவித்திருப்பது முற்றிலும் தவறானது. இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றார்.
Post a Comment