தமிழ்ப் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிப்பதும், தணிக்கை செய்வதும் தொடர்கிறது. அவர்கள் என்ன நமது படங்களுக்கு தடை விதிப்பது… இலங்கையில் எனது படத்தை திரையிட அனுமதி தரமாட்டேன். கோடம்பாக்கம் நினைத்தால் கொழும்பு வருமானத்துக்கே செக் வைக்க முடியும், என்றார் இயக்குநர் / தயாரிப்பாளர் சசிகுமார்.
சர்ச்சைக்குரிய தமிழ் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிக்கிறது. புதுப்படங்களை அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்களை நீக்குகிறது. இஷ்டம் போல் காட்சிகளை வெட்டித் தள்ளி அரை குறையாக தியேட்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தீபாவளிக்கு ரிலீசான 7ஆம் அறிவு படத்திலும் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்கள் நீக்கப்பட்டன. இலங்கையின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இயக்குனர் சசிகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பத்திரிகைப் பேட்டியில், "தமிழனாகப் பிறந்த எல்லோருமே ஈழ உணர்வாளர்கள்தான். இதயத்தைப் பிளந்து காட்டித்தான் அதை வெளிப்படுத்த ணும்கிற அவசியம் இல்லை. சராசரி சசிகுமாரா அந்த துயரத்துக்காகத் துடிச்சிருக்கேன். கதறி இருக்கேன். உணர்வோ உதவியோ… என்னால முடிஞ்சதை எப்பவுமே செய்றவன் நான். அதை வெளியே காட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இப்பவும் 'போராளி' படத்துக்கான எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாதுங்கிறதுல நான் உறுதியா இருக்கேன். ஒரு தயாரிப்பாளரா இந்த முடிவு என்னைப் பாதிக்கும்தான். ஆனால், கண்ணீரும் கதறுலுமா நம்ம சொந்தங்கள் அல்லாடித் தவிக்கிற அந்த மண்ணில் படம் ஓட்டிக்காட்ட நான் விரும்பலை.
முன்னாடிலாம் கிராமப்புறங்களில் வயதானவங்க இறந்துட்டா தூக்கம் விழிக்கணுங்கிறதுக்காக துக்க வீட்டில் சினிமா ஓட்டுவாங்க. உலகத்தையே உலுக்கிய துக்கத்துக்கும் நாம படம் ஓட்டிக்கிட்டு இருக்கிறது நியாயமா படலை.
அங்கே மிச்ச சொச்சமா இருக்கிற தமிழர்களும் படம் பார்க்கிற மனநிலையில் இல்லை. சுற்றுலாவும் சினிமாவும்தான் இலங்கையோட பொருளாதார ஆதாரம். தொப்புள்கொடி உறவுனு துடிக்கிற நாம் எதுக்காக இலங்கைக்கு எஃப்.எம்.எஸ். உரிமை கொடுக்கணும்? எவ்வளவு லாபத்தை இழந்தாலும், இனி நான் எடுக்கப்போற எந்தப் படத்துக்குமே எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்குக் கொடுக் கப்போறது இல்லை.
தமிழ் உணர்வு களைத் தட்டி எழுப்புற மாதிரி ஒரு வசனம் வந்தால்கூட சம்பந்தப்பட்ட படத்தை இலங்கை அரசாங்கம் தடை பண்ணிடுது. சமீபத்தில்கூட இந்த மாதிரி கெடுபிடிகளை இலங்கை அரசு காட்டி இருக்கு. அவங்க என்ன நம்ம படங்களைத் தடை பண்றது?
கோடம்பாக்கம் மனசு வைத்தால் கொழும்புக்கே வருமானரீதியா செக் வைக்க முடியும். நமக்கும் இதில் இழப்பு இருக்கத்தான் செய்யும். என்ன பண்றது? உயிரையும் உயிரா நெனச்ச மண்ணையும் இழந்தவங்களுக்காக வருமானத்தை இழக்குறது தவறே இல்லை!" என்று கூறியுள்ளார்.
சசிகுமாரின் இந்த அதிரடி முடிவு தமிழ் உணர்வு கொண்ட பல தயாரிப்பாளர்களையும் யோசிக்க வைத்துள்ளது.
சசிகுமார் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், "இலங் கைக்கு எஃப்.எம்.எஸ். உரிமை வழங்கலாமா, கூடாதா என்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்கு நர்கள் சங்கம் உள்ளிட்டவை கலந்து ஆலோசித்து இப்படி ஒரு திட்டத்தைச் சொன்னால், நிச்சயமாக அதனை ஏற்று நடப்பேன். தமிழர்களின் வலி அறிந்த ஒரு தயாரிப்பாளர்களில் ஒருவனாக சசியின் கருத்துக்குத் தலைவணங்குகிறேன். சினிமா வுக்கு வருமானம் அவசியம்தான் என்றாலும், அதைவிட, தமிழனின் தன்மானம் முக்கியமானது!" என்று கூறியுள்ளார்.
Post a Comment