மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 100வது சர்வதேச சதத்தை சச்சின் பூர்த்தி செய்வார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கிரிக்கெட் உலகில் அதிக ரன்களை குவித்தவர், அதிக டெஸ்ட் சதங்கள், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் என்று இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 99வது சதத்தை அடித்த சச்சின் அடுத்து வரும் போட்டிகளில் 100வது சதமடிப்பார் என்று ரசிகர்கள் இடையே எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் அதன்பின் சச்சின் கலந்து கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அந்த சாதனையை நிகழ்த்த முடியவில்லை.
மொத்தம் கலந்து கொண்ட 12 போட்டிகளில் 431 ரன்களை மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக இந்திய அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற போது அந்த சாதனை நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் தொடர் தோல்விகளோடு நாடு திரும்பியது தான் மிச்சம்.
இந்தியாவுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது காயம் காரணமாக சச்சின் எந்த போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்தியா அணியின் சகவீரர்கள் கூட சோர்ந்து போய்விட்டனர்.
இந்த நிலையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள மேற்கிந்திய தீவு அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி நாளை துவங்க உள்ளது. இந்த போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள சச்சின் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது வழக்கமான முகபாவனையில் அணியின் சகவீரர்களுடன் பேசி மகிழ்ந்தார். எந்த மன அழுத்தமுமின்றி காணப்பட்டார்.
மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் ஷிவ்நரேன் சந்தர்பால், டாரன் பிராவோ, பிஷூ உள்ளிட்ட வீரர்கள் களமிறங்க உள்ளது. இந்திய அணியின் சார்பாக காயம் காரணமாக ஓய்வில் இருந்த சச்சின் உடன், சேவாக், யுவராஜ் சிங் ஆகியோரும் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இளம் வீரர்களுடன் தற்போது பலமான நிலையில் உள்ள இந்திய அணியில் அனுபவ வீரர்களும் இணையும் பட்சத்தில் நாளைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவே இருக்காது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Post a Comment