இன்று உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளில் ஒன்று, அதிகரிக்கும் கழிவுகள். பெருகிவரும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், வீடுகளில் இருந்து தேவையற்றது என்று தூக்கிப் போடப்படும் குப்பைகூளங்கள் போன்றவற்றை ஒழிப்பது, முற்றுப் பெறாத பிரச்சினை.
சில கழிவுகள் வேறொரு தொழிலுக்கு கச்சாப்பொருளாகப் பயன்படுகின்றன. உதாரணமாக, கரும்புச் சக்கையில் இருந்து காகிதம் தயாரிக்க முடிகிறது. சில கழிவுகள் எரிபொருளாகப் பயன்படுகின்றன.
சில கழிவுப்பொருட்கள், அவை வெளிவரும் தொழிற்சாலையிலேயே மறுசுழற்சி முறையில் மீண்டும் உள்ளே அனுப்பப்பட்டு உபயோகப்படுத்தப்படுகின்றன. அல்லது அடர்த்தி, வீரியம், திடம் போன்றவை குறைக்கப்பட்டு வெளியே அனுப்பப்படுகின்றன. பயிர்களுக்கு உரமாக்கப்படுகின்றன.
இன்று வீடுகளில் பயன்படுத்துவதற்கு, தூக்கியெறிந்து விடக்கூடிய பேப்பர் அல்லது மெல்லிய பிளாஸ்டிக் தட்டு, கிண்ணம், டின்னில் அடைக்கப்பட்ட உணவு என்று வருகின்றன. குப்பைத் தொட்டியில் போடப்படும் இவற்றை மீண்டும் உபயோகத்துக்கு உரிய வேறு பல பொருட்களாக்க முடியுமா?
முதலில் காகிதக் குப்பைகளைப் பற்றிப் பார்ப்போம். செய்தித்தாள், குப்பைக்
கூளங்கள் போன்றவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து, மேலும் பல ரசாயனங்களைக் கலந்து கூழாக்கி, அந்தக் கூழை உபயோகித்து மலிவான காகிதம், அட்டைப்பெட்டிகள், காகிதப் பொம்மைகள், தட்டு, உறிஞ்சு குழாய்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
செய்தித்தாள் முதலில் அலசப்படும். பிறகு, அச்சு மையை `பிளீச்' செய்வார்கள். அதன் பிறகு அட்டை போன்றவற்றைத் தயாரிப்பார்கள். ஆனால் இது செலவு அதிகமாக ஆகும் முறையாகக் கருதப்படுகிறது. ஆனால் காகிதம் சிறந்த எரிபொருள். அந்த வகையிலும் வீணான காகிதம் பயன்படுத்தப்படுகிறது.
உலோகங்களை மறுசுழற்சி செய்வது பற்றிப் பார்ப்போம். தகரம், இரும்பு ஆகியவை `தூக்கியெறியப்பட்ட' பொருளாக அதிக அளவில் கிடைக்கின்றன. இதை தினசரி வாழ்க்கையிலேயே காண்கிறோம்.
இவ்வாறு திரளும் பழைய இருப்புப் பொருட்களை மின் அடுப்பில் உருக்குகிறார்கள். ஆக்சிஜன் அதில் ஊதப்பட்டு, இரும்பு ஆக்சைடு கிடைக்கிறது. இதில் கரித்துண்டுகள் சேர்க்கப்பட்டு ஆக்சிஜன் நீக்கம் நடைபெறுகிறது.
இவ்வாறு செய்யப்படும்போது கார்பன் மோனாக்சைடு குமிழிடுகிறது. இம்முறையில் இளக்கப்பட்ட இரும்பு, தேவைக்கேற்ற வடிவங்களில் வார்க்கப்பட்டோ, வளைக்கப்பட்டோ இரும்புப் பொருளாகிறது.
நன்றி-தினத்தந்தி
Post a Comment