கூடங்குளம் அணு உலையை மூடும்பட்சத்தில், தமிழகத்தில் மின்வெட்டை நீடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால், தமிழகத்தில் அடுத்த ஆண்டிலும் மின்வெட்டு அமலாகும்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல அமைப்பினர், கூடங்குளம் மின் நிலையத்தை மூடக்கோரி போராட்டம் நடத்தினர். இடிந்தகரை பகுதி ரோமன் கத்தோலிக்க தேவாலய பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் இதில் பங்கேற்றனர்.இது குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதியதால், பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, தமிழகத்திற்கு வந்து பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து, கூடங்குளம் அணு உலையை நிறுத்திவைக்க, தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இதனால், உண்ணாவிரத போராட்டம், தற்காலிகமாக வாபசாகியுள்ளது.
இந்நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடினால், தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. "அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்கு பின், தமிழகத்தில் மின்வெட்டு நீக்கப்படும்' என, தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில், 462 மெகாவாட், தமிழகத்திற்கு கிடைக்கும் என்ற கணக்கில் தான், இந்த அறிவிப்பு வெளியானது.ஆனால், தற்போது தமிழக அரசே முன்வந்து, கூடங்குளம் அணு உலையை மூட ஆதரவு தெரிவிக்கும் போது, கூடுதல் மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மின்வெட்டால் தமிழகம் தொடர்ந்து பாதிக்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து, மின்துறை மேலதிகாரி கூறும்போது, "நிலக்கரி பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்ப கருவிகள் தட்டுப்பாட்டால், தமிழகத்தில் தற்போது பணிகள் நடக்கும் மின் திட்டங்களின் நிறைவு காலம், திட்டமிட்டதை விட தாமதமாவதால், மற்ற மின்திட்ட உற்பத்தியை நம்பமுடியாது. ஆனால், கூடங்குளம் திட்டம் மட்டுமே குறிப்பிட்ட காலத்தில் முடியும் நிலையில் உள்ளது."அங்கு குறிப்பிட்ட காலத்தில் மின் உற்பத்தி துவங்கினால், மின்வெட்டு பிரச்னை தீரும் என, கணக்கிட்டோம். ஆனால், போராட்டங்களால் கூடங்குள மின் உற்பத்தியும் தாமதமானால், வரும் ஆண்டுகளிலும், தமிழகத்தில் மின்வெட்டை நீடிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்' என்றார்.
இதற்கிடையில், தற்போதே காற்றாலை மின்சாரம் பகல் நேரத்திலும், காலை நேரத்திலும் மிகக்குறைவாக உள்ளதால், மின்வெட்டு நேரம் மீண்டும் மூன்று மணி நேரமாக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல், தமிழகத்தில் காற்று வீசுவது குறையும் என்பதால், காற்றாலை மின்சார உற்பத்தி பெருமளவு குறைந்து விடும். இதை சமாளிக்க, தமிழக மின்வாரியத்திற்கு கூடங்குளம் மின்சாரம் வரவேண்டிய அவசியமாகியுள்ளது. எங்கோ நடந்துவிட்ட விபத்துக்காக அணுஉலைகளை மூடச் சொல்வது என்ன நியாயம் என்ற கேள்வி, பெரும்பான்மை மக்களிடமிருந்து எழுகிறது. விபத்துகள் அதிகரிப்பால், விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் பயணம் செய்யாமல் இருக்கிறோமா; காதுகளுக்கும், மூளைக்கும், இதயத்திற்கும் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் என்பதால், மொபைல் போன் பயன்பாட்டை தவிர்த்து விட்டோமா; சுனாமி வந்ததால், மீன் பிடிப்பதும், கப்பல் பயணங்களும் நின்று விட்டதா; வாகனங்கள், தொழிற்சாலைகளின் புகையால் சுற்றுச்சூழல் சீர்கெட்டு, ஓசோன் மண்டலம் ஓட்டையாகி, உலகம் வெப்பமயமாகிறது என்ற அறிவுறுத்தலால் தொழிற்சாலைகளை மூடி விட்டோமா?
இப்படி எத்தனையோ, ஆபத்தான கேள்விகள் எழுந்தாலும், சுயநலனுக்காக சிலவற்றை விட்டுக்கொடுத்துதான் உலக மக்கள் வாழ்கின்றனர். நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற நோக்கத்தில் தான், புதிய திட்டங்களை அரசு கொண்டு வருகிறது.நாட்டின் முன்னேற்றம் என்பது மக்கள் நலன் சார்ந்ததே. கூடங்குளம் போன்ற திட்டங்களை அரசு உருவாக்கும்போது, மக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, பல்வேறு ஆய்வுகளுக்கு பின்பே திட்டத்தை இறுதி செய்கிறது.அப்படியிருக்கையில், தேவையற்ற பீதியையும், அச்சத்தையும் பொதுமக்களிடம் ஏற்படுத்தும் செயல்பாடுகள், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானதாகவே கருதப்படும். பொதுமக்களின் நலன் சார்ந்த விஷயங்களில், இது போன்ற அமைப்புகளும், தனிநபர்களும் காட்டும் அக்கறையை விட, நிர்வகிக்கும் அரசு, அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் என்ற உண்மையை, சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் தான், இப்பிரச்னைக்கு எளிதான தீர்வு வரும்.
"அணு உலைகளால் ஆபத்து குறைவு':
உலக அளவில், 99 அணு விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில், 57 சதவீதம் அமெரிக்காவில் தான் நடந்துள்ளன. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், "த்ரீ மைல் ஐலேண்ட்' அணு உலையில், குளிர்கலனில் கோளாறு ஏற்பட்டு, கொதிகலன் வெடித்தது.இதில், எந்த உயிர்சேதமும் இல்லை. சோவியத் ரஷ்யாவில் இடம் பெற்றிருந்த உக்ரைனில், "செர்னோபைல்' அணுமின் உலையில், நடந்த விபத்தில், 56 பேர் பலியாயினர். 4,000 பேர் பாதிக்கப்பட்டனர்; லட்சக்கணக்கானோர் முன்னெச்சரிக்கையாக இட மாற்றம் செய்யப்பட்டனர்.ஆனால், கதிர்வீச்சு பாதிப்பால், 2,500 பேர் வரை கேன்சர் நோயால் இறந்தனர். உலகிலேயே இந்த அணு மின் விபத்துதான் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது.
ஜப்பானின் தோகைமோரா அணு உலையில், 1999ம் ஆண்டு விபத்தில் இரண்டு பேர் பலியாயினர். இதேபோல், 2004ல் ஜப்பான் மிகாமா அணு உலையில் கொதிகலன் வெடித்த விபத்தில், நான்கு பேர் பலியாயினர். பின், கடந்த மார்ச் 11ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி இயற்கை பேரழிவில், "புகுசிமா டைச்சி' அணு உலையில் கொதிகலன் வெடித்த விபத்தில், தொழிலாளர்கள் மூன்று பேர் பலியாயினர்; 80 ஆயிரம் பேர் குடியிருப்புகளிலிருந்து முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
அணு மின் நிலையங்களை விட, மற்ற மின் நிலையங்களால் தான் அதிக பாதிப்பு என, ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதன்படி, 1992ம் ஆண்டு வரை, 20 ஆண்டுகள் குறித்த ஆய்வில், அனல்மின் நிலையங்களால், 6,400 பேர், எரிவாயு மின் நிலையங்களால் 1,200 பேர், நீர்மின் நிலையங்களால், 4,000 பேர் வரை இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு, 24 ஆயிரம் பேர், அனல்மின் நிலைய விபத்துகளால் இறந்தும், 40 ஆயிரம் பேர் அனல்மின் நிலைய சுற்றுச்சூழலால் இதய கோளாறு ஏற்பட்டு பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வகையில், அணுமின் நிலையங்களை விட மற்ற மின் நிலையங்களால் ஏற்படும் இழப்புகள் தான் அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தியாவில், 16 அணுமின் நிலைய விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில், 2003ல் உத்தர பிரதேசம் நரோரா அணு உலையில், ரியாக்டரில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு, நிலையம் செயலிழந்தது. 1991ல், கல்பாக்கம் அணு உலையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. பின், 2003ல் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், ஐந்து ஊழியர்கள் கதிர்வீச்சு தாக்குதலுக்கு ஆளாகினர்.ஆனால், இந்தியாவில், உயிர் சேதங்களோ, கதிர்வீச்சு பிரச்னைகளோ இதுவரை ஏற்படவில்லை. இதேபோல், 2004ல் சுனாமி ஏற்பட்ட போது, கல்பாக்கம் நிலையம் தானாகவே செயலிழந்தது. இதன்மூலம் இந்திய அணு உலைகள் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
கனிம நிறுவனங்களால் தென்மாவட்டங்களுக்கு ஆபத்து:
தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடியில், பூமிக்கடியில் அதிகளவில் கனிமங்கள் உள்ளன. இதை, சில தனியார் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக பயன்படுத்துகின்றன. இங்கு கனிம சாம்ராஜ்யம் நடத்துவோர் மட்டுமே, எதையும் சாதிக்கமுடியும் என்ற நிலை உள்ளது.கடந்த காலங்களில், வெறும் ஒரு லட்சம் ரூபாய்க்கு விலை போன ஒரு ஏக்கர் நிலம், தற்போது, 10 லட்ச ரூபாய்க்கு விலை போகிறது. 2007ல், முந்தைய தி.மு.க., ஆட்சி முயற்சியுடன், இங்கு, 2,500 கோடி ரூபாய்க்கு, "டைட்டானியம்' தொழிற்சாலை அமைக்க, டாடா நிறுவனம் முன் வந்தது. ஆனால், சாத்தான் குளம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், 10 ஆயிரம் ஏக்கர் நிலமெடுக்க வேண்டிய நிலையில், சில அரசியல் கட்சிகள், ஜாதி அமைப்புகள், தனியார் கனிம நிறுவன அதிபர்களின் பின்னணியுடன், போராட்டம் நடந்தது.இதனால், இனி தமிழகத்தில் எந்த தொழிற்சாலையும் துவங்கப் போவதில்லை எனக் கூறி, டாடா நிறுவனம் திரும்பி சென்றது. தென்மாவட்டத்தில், அரசியல்வாதிகளின் துணையுடன் தனியார் கனிம நிறுவனங்கள், நிலங்களை தோண்டி, கனிமங்களை தன்னிச்சையாக விற்பனை செய்த வண்ணம் உள்ளன.
தற்போது, அணு மின் நிலையம் வந்ததால், அதைச் சுற்றி, 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, கனிமங்கள் வெட்டியெடுக்கவோ, தொழிற்சாலைகள் அமைக்கவோ, மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் அமைக்கவோ அனுமதியில்லை என்பது, பெரும் தொழிலதிபர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதனால், பல தொழிலதிபர்களும் கூடங்குளம் போராட்டத்தை ஆதரிப்பதாக, மின்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கடந்த கால வரலாறுகளை பார்க்கும்போது, கனிம வளங்களை அரசு கைப்பற்றி, முறைப்படுத்தாவிட்டால், தென்மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி, கனிம ஏற்றுமதி தனியார் நிறுவனங்களின் போட்டிகளாலேயே பாதிக்கப்படும் ஆபத்து உருவாகும்.
யுரேனிய இருப்பால் கூடங்குளத்திற்கு பாதுகாப்பு:
கூடங்குளம் அணு உலையில், இரண்டு உலைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும், ஆண்டுக்கு, 75 டன் யுரேனியம்-235 பயன்படுத்தப்படும். ரஷ்யாவிடமிருந்து, கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே, இரண்டு உலைகளுக்காக, 150 டன் யுரேனியம் வாங்கப்பட்டுள்ளது. இவை, கூடங்குளம் உலைகளில், நிரப்பப்பட்டு, "கிரிட்டிகாலிட்டி' என்ற ஆய்வுக்கு தயாராகியுள்ளன. தற்போது, போராட்டம் வலுத்துள்ளதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த யுரேனியத்தை பயன்படுத்தவே முடியும். இதை மீண்டும் ரஷ்யாவிற்கு விற்க முடியாது. உலைகளை மீண்டும் திறந்து யுரேனியத்தை அப்புறப்படுத்தி, வேறு எங்கும் எடுத்துச் செல்லவும் முடியாது என்பதால், மிகவும் உச்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், அணு உலையை இயக்கிதான் யுரேனிய எரிசக்தியை பயன்படுத்த முடியும். இதுகுறித்து, அணுமின் கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, "மின்நிலையத்தின் உற்பத்தி பணிகள் துவங்கும் நிலையில், தொழில்நுட்ப ரீதியாக அதை நிறுத்தமுடியாது. மேலும் எரிசக்தியை உலைகளில் வைத்துவிட்டதால், இனி உலையைமூடுவது எளிதல்ல' என்றார்.
அணு மறுசுழற்சி அனுமதி கிடைக்கவில்லை:
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அணு மறுசுழற்சி அனுமதி பெற, மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தப்படி, அமெரிக்கா தரும் யுரேனியத்தை இந்தியா பயன்படுத்திய பின், அமெரிக்க நிபந்தனைகளுக்கு ஏற்ப, வலுவிழந்த அணுவை மறுசுழற்சியில் பயன்படுத்த அனுமதி உண்டு. ஆக்கப்பூர்வமான மின் உற்பத்திக்கும், ராணுவத்திற்கும் இந்த மறுசுழற்சியை மேற்கொள்ள முடியும். கூடங்குளத்தின் இரண்டு உலைகள், ரஷ்யாவில் வாங்கப்பட்டு, நிபந்தனையின்றி யுரேனியமும் ரஷ்யாவிடம் வாங்கப்படுகிறது. இவற்றிற்கான மறுசுழற்சி அனுமதியை ரஷ்யா, இந்தியாவிடம் அளித்துள்ளது.இது, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. ஆனால், அங்கே அடுத்து நிறுவவுள்ள, 3வது, 4வது ரியாக்டர்கள், அமெரிக்க உதவியுடன் அமையவுள்ளது. இதற்கு மட்டும், அணுசக்தி ஒப்பந்தத்தில் அனுமதி தரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத அணு மின்நிலைய அதிகாரி கூறியதாவது:இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தப்படி, அமெரிக்காவிடம் வாங்கும் யுரேனியத்தை நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மறுசுழற்சிக்கு பயன்படுத்தலாம். ஆனால், கூடங்குளம் திட்டம், இந்த ஒப்பந்தத்தில் வராது என்பதால், ரஷ்யாவிடம் வாங்கும் அணுவை, மறுசுழற்சி செய்ய சர்வதேச அனுமதி கிடைக்கவில்லை.அனுமதிக்காக தொடர்ந்து முயற்சிக்கிறோம். சர்வதேச அளவில் இதற்கு பேச்சு நடக்கிறது. இந்நிலையில் தான், அணு உலையை திறக்கக் கூடாது என திடீர் போராட்டம் நடந்துள்ளது. எனவே, போராட்டத்திற்கு பின்னால், யார் தூண்டி விடுகின்றனர் என்பது, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.இப்பகுதி மக்களிடம், கடந்த பல ஆண்டுகளாக பேசி, நிலம் வாங்கி, அங்குள்ளோருக்கு கான்ட்ராக்ட் கொடுத்து, வேலைக்கு உள்ளூர் ஆட்களை தேர்வு செய்து பல சலுகைகளை தந்துள்ளோம். எங்கள் திட்டத்தால், கடந்த பல ஆண்டுகளாக இடிந்தகரை மற்றும் அதைச் சுற்றிய கிராமங்கள், பல பயன்களை பெற்றன.ஆனால், 16 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து, 10 ஆண்டுகால உழைப்பின் பலனை அனுபவிக்க வேண்டிய நேரத்தில், திடீரென போராட்டம் நடத்துகின்றனர். இதில், அப்பாவி மக்களை தூண்டிவிட்டு, போராட்டம் நடத்த மிகப்பெரிய சக்திகளும், அரசியல் காரணங்களும் பின்னணியில் இருக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
அணு மறுசுழற்சிக்கு அனுமதி ஏன்?
அணுமின் உற்பத்திக்கு யுரேனியம்-235 மற்றும் தோரியம் பயன்படுகின்றன. இந்தியாவில், ஒடிசா மற்றும் கேரள கடற்கரையோர பகுதிகளில், தோரியம் அதிகமாக கிடைக்கிறது. இதேபோல், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் உள்ள கடற்கரை பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டத்திலும் தோரியம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.தற்போதைய நிலையில், ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து, இந்தியா யுரேனியம் வாங்குகிறது. யுரேனியத்திற்கு அதிக தட்டுப்பாடு உள்ளதால், அதன் விலையும் அதிகம். சர்வதேச அளவில், சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் கட்டுப்பாட்டில் யுரேனிய விற்பனை நடக்கிறது. இதில், ஐக்கிய நாட்டு நிரந்தர பாதுகாப்பு நாடுகளின் கண்காணிப்பும் உள்ளன.யுரேனியத்தை ஒரு முறை வாங்கி, அதை பிளந்து மின்சாரம் தயாரிக்க முடியும். மீண்டும், மீண்டும் 60 முறை யுரேனியத்தை பிளந்து வெப்ப சக்தி ஏற்படுத்தி, அணுமின்சக்தி பெறப்படுவது தான் அணு மறுசுழற்சி. முதல் முறை பயன்படுத்தப்பட்ட வலுவிழந்த அணுவிலிருந்து, புளுட்டோனியம் கிடைக்கும். இதை, மீண்டும் குறிப்பிட்ட யுரேனியத்துடன் சேர்த்து, மீண்டும் மின்சார உற்பத்தி செய்யலாம். இந்தியாவில், மறுசுழற்சிக்காக தமிழகத்தில் கல்பாக்கத்தில், 500 மெகாவாட் அணு உலை கட்டப்பட்டு வருகிறது.
பல நாடுகள், அணு மறுசுழற்சியை தவறாக ராணுவத்திற்கு பயன்படுத்தலாம் என்பதால், மறுசுழற்சிக்கு அனைத்து நாடுகளுக்கும் அனுமதியில்லை. பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் மட்டுமே, அணுசக்தி மறுசுழற்சி நிலையங்கள் வைத்துள்ளன. அமெரிக்காவுக்கு இந்த அனுமதி இருந்தாலும், தன் நாட்டில் மறுசுழற்சி செய்வதில்லை என சமீபத்தில் முடிவெடுத்துள்ளது.இந்தியாவிற்கு, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தப்படி, மறுசுழற்சி அனுமதி கிடைத்தாலும், சர்வதேச அணுசக்தி ஏஜன்சி மற்றும் அமெரிக்க கட்டுப்பாட்டில், பல நிபந்தனைகளுடன் மட்டுமே, அதை மேற்கொள்ள முடியும். இந்த ஒப்பந்தம் தான், 123 (ஒன், டூ, த்ரீ) ஒப்பந்தம் எனப்படுகிறது.
நன்றி – தினமலர்
Post a Comment