'பிரியமானவளே' திரைப்பட பாணியில், 2 ஆண்டு தற்காலிக திருமண ஒப்பந்த சட்டத்தை, மெக்சிகோ நாட்டில் விரைவில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டில் திருமணம் செய்து கொள்வதும், உடனே விவகாரத்து கேட்பதும் சர்வசாதாரணம். விவகாரத்து வழக்கு நீதிமன்றங்களில் குவிந்து, கால விரயம் ஏற்படுகிறது. மெக்சிகோவில் ஒரின சேர்க்கை திருமணங்களையும் அங்கீகரித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதால், திருமணங்கள் எதுவுமே அதிக ஆண்டுகள் நிலைத்து நிற்பதில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.
மெக்சிகோ நாட்டில் அமெரிக்காவை போலவே 50 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. இந்த நிலையை களைய மெக்சிகோ நாட்டின் திருமண சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் முதலில் 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர். அந்த 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பின்னும் சுமூகமான உறவு தொடந்தால், அந்த திருமண ஒப்பந்தத்தை மேலும் நீட்டித்து கொள்ளலாம். தம்பதியரிடையே சண்டை, சச்சரவுகள் எழுந்து மனமுடையும் நிலை ஏற்பட்டால், அந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தாங்களாகவே பிரிந்து சென்றுவிடலாம். விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை.
இதற்கு யாரும் நீதிமன்றத்திற்கு சென்று விவகாரத்து கேட்டு காத்திருக்க வேண்டியதில்லை. இதன்மூலம் நீதிமன்றத்தின் காலவிரயம் தவிர்க்கப்படும். இந்த சட்டத் திருத்தத்தை விரைவில் கொண்டு வர, நாட்டின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் தரப்பில் ஆதரவு கிடைத்துள்ளது. சில கிறிஸ்தவ சங்கங்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த சட்டம் கொண்டு வரப்பட்டால், கிறிஸ்தவ திருமணங்களில் ஏற்கப்படும் உறுதிமொழிகளில் ஒன்றான, மரணம் நம்மை பிரிக்கும் வரை சேர்ந்து வாழ்வேன் என்ற வாக்கியம் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும்.
இந்த சட்டத்திற்கு சட்ட வல்லுநர்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, இந்த சட்டத்திருத்தம் வந்தால், திருமண உறவின் தன்மை சிதைந்துவிடும். சட்டசபை உறுப்பினர்களின் பொறுப்பற்ற தன்மையே இந்த சட்டத்தின் மூலம் தெரிகிறது. ஒரின சேர்க்கை திருமண சட்டமே, திருமண உறவிற்கு விரோதமானது. இந்நிலையில் ஒப்பந்த திருமண சட்டமும் அமலுக்கு வந்தால், திருமணத்தின் மொத்த சிறப்பும் இழந்துவிடும், என்றனர்.
Post a Comment