அமைச்சர் கல்யாணசுந்தரம் பதவி விலகக்கோரி காலாப்பட்டில் சாலைமறியலில் ஈடுபட முயன்ற காங்கிரசார் 60 பேரை போலீசார் கைது செய்தனர். புதுவை கல்வி அமைச்சரான கல்யாணசுந்தரம் திண்டிவனத்தில் ஆள்மாறாட்டம் செய்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியதாக தகவல் பரவியது.
ஆனால் இதனை அமைச்சர் கல்யாணசுந்தரம் மறுத்திருந்தார். இந்த நிலையில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய அமைச்சர் கல்யாணசுந்தரம் பதவி விலகக்கோரி காலாப்பட்டு காங்கிரஸ் கமிட்டியினர் அதன் தலைவர் சந்திரசேகர் தலைமையில் போராட்டம் நடத்த காலாப்பட்டு மெயின் ரோட்டில் இன்று காலை திரண்டு இருந்தனர்.
இதனை அறிந்த லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன், காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டம் நடத்த திரண்டிருந்த காங்கிரசாரிடம் தற்போது வடக்கு பகுதியில் போராட்டம் நடத்த தடை உள்ளதால் போராட்டம் நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
இதனால் காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரசார் அமைச்சர் கல்யாணசுந்தரம் பதவி விலகக்கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலைமறியலிலும் ஈடுபட முயன்றனர்.
இதைத்தொடர்ந்து தடையை மீறி சாலை மறியல் செய்ய முயன்ற காலாப்பட்டு தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளான சந்திரசேகர், சிவா, முருகன், மூர்த்தி, ஆடியபாதம் புருஷோத்தமன், வெங்கடேசன் உள்ளிட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
Post a Comment