வாச்சாத்தி வன்கொடுமை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு திமுக சார்பில் ரூ. 15,000 நிதியுதவி அளிக்கப்படும் என திமுக தலைவர்கள் கருணாநிதி அறிவித்திருந்தார். அதன்படி எம்.பி தாமரைச் செல்வன் தலைமையில் நிதியுதவி அளிக்க திமுக குழுவினர் சென்றனர். ஆனால் அந்த நிதியைப் பெற்றுக் கொள்ள வாச்சாத்தி கிராமத்தினர் மறுத்து விட்டனர்.
இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட ஏழைப்பெண்கள் 18 பேருக்கு திமுக அறக்கட்டளை சார்பில் வழங்கிய ரூ.2.70 லட்சம் பற்றிய செய்தியை பத்திரிகைகள் வெளியிடாவிட்டாலும், அவர்கள் அந்த தொகையை வாங்க மறுத்துவிட்டார்கள் என்ற செய்தியை சில பத்திரிகைகள் விரிவாக வெளியிட்டுள்ளன. அந்த செய்தியில் இதுவரை திமுக உதவி செய்யாமல் இப்போது உதவி செய்வதற்காக அந்த பெண்கள் அதை வாங்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
வாச்சாத்தி மக்களுக்கு ஏற்கனெவே திமுக ஆட்சியில் 2007ஆம் ஆண்டு 34 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இப்போது வாங்க மறுக்கிறார்கள் என்ற ஒரு செய்தியை வெளியிடுவது அந்தப் பத்திரிகைகளுக்கு மனத் திருப்தி என்றால், அதிலே நான் குறுக்கே நிற்க விரும்பவில்லை.
இதேபோல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்டோருக்கு அக்டோபர் 2006ல் ரூ.20 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 2007ல் ரூ.1.80 கோடி நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது. அதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சிவபுண்ணியம் சட்டப்பேரவையிலேயே வரவேற்றுப் பேசி இருக்கிறார் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
Post a Comment