எனது மகள் வித்யா ராணிக்கு, எனது கணவர் வீரப்பன் பெயரைச் சொல்லக் கூட தகுதி இல்லை. எனது கணவர் பெயரைச் சொல்லி அவர் யாரிடமும் உதவி கோரக் கூடாது, யாரும் வித்யா ராணிக்கு உதவாதீர்கள் என்று கூறியுள்ளார் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி.
வீரப்பன்-முத்துலட்சுமி தம்பதியின் மூத்த மகள் வித்யாராணி. இவர் சில மாதங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த மரிய தீபக் என்பவரை மணந்தார். பின்னர் குடும்பமும் நடத்தி வந்தார். இதைக் கேள்விப்பட்டு அதிர்ந்த முத்துலட்சுமி தனது மகளை வீட்டோடு சிறை வைத்தார்.
இதையடுத்து மரிய தீபக் ஹேபியஸ் கார்ப்பஸ் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் வித்யா ராணியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. அதன்படி வித்யாராணியை போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பின்னர், வித்யா ராணி மேஜர் என்பதால் அவர் விருப்பப்படி வாழலாம் என்று கூறி விட்டது கோர்ட். இதையடுத்து தனது கணவருடன் போய் விட்டார் வித்யாராணி.
இந்த நிலையில் முத்துலட்சுமி இன்று செய்தியாளர்களை சேலத்தில் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எனது கணவர் வீரப்பன் பெயரைச் சொல்லக் கூட வித்யாராணிக்கு அருகதை கிடையாது. அவரது பெயரைச்சொல்லி யாரிடமும் அவர் உதவி கோரக் கூடாது. யாரும் அவருக்கு உதவாதீர்கள். எந்த அரசியல் வாதியும் அவருக்கு உதவக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
எனது மகளுக்கோ, அவரது கணவருக்கோ ஒருவரும் ஒரு உதவியும் செய்யக் கூடாது என்றார் முத்துலட்சுமி.
Post a Comment