நீண்ட நாட்களுக்கு பிறகு ... யதிராஜ்...
மத்தியஸ்தர் :
இரண்டாண்டுகளுக்கு முன், வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்ப்ரஸ் ரயிலில் மங்களூருக்குப் ப்ரயாணம் செய்து கொண்டிருந்த போது, எனக்கு அருகே இருந்த படுக்கை (Berth) எண் 55 -இல் ஒரு மத்தியதர வயதுடையவர் படுத்திருந்தார். ரயில் பாலக்காடு சந்திப்பை அடைந்த போது மணி இரவு ஒன்பது இருக்கும், பெரும் சந்தடிகளுக்கிடையே ஒரு பெரிய பக்தர்கள் குழாம் ரயிலில் ஏறியது. அவர்களில் ஒருவர், முன்பு குறிப்பிட்ட படுக்கை எண் 55 இல் படுத்திருந்தவரிடம், அது தனக்காக ஒதுக்கப்பட்ட படுக்கை எனவும், அதைத் தனக்கு கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தார். பிரயாண புக்கிங் ஏஜெண்ட் மூலம் அதற்கான அத்தாட்சியையும் பெற்றிருந்தார். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர், இரண்டாமவரிடம் அது அவருக்குண்டான படுக்கை அல்ல, ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதைப் புரிய வைக்க முயன்று கொண்டிருந்தார், ஆனால் அதை அவர் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. இல்லை அது தமதே என்று இருவரும் வாதாடிக் கொண்டிருந்தனர். ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு காவலர் அங்கு வந்து, இரண்டாமவரை அப்புறப் படுத்த முயன்றார். ஆனாலும் பலனில்லை; அவருடன் வந்த மற்ற பிரயாணிகள் அவருக்கு ஆதரவாக வாதாடத் துவங்கவே, ஒரே கூச்சல்; குழப்பம்.
ரயில் பாலக்காட்டைத் தாண்டி, நான்கு ரயில் நிலையங்கள் கடந்த பிறகும் கூட, உச்சஸ்தாயியில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது. இதற்கிடையே திரூர் ரயில் நிலையத்தைக் கடந்தவுடன் ஒருவர் அபாயச் சங்கிலியயப் பிடித்திழுத்து ரயிலையும் நிறுத்தி விட்டார். இவ்வாறான கடும் வாக்குவாதங்களால் யாராலும் தூங்க இயலவில்லை, நேரமும் நள்ளிரவைக் கடந்து சென்று கொண்டிருந்தது.
நடப்பவைகளை நான் நோட்டமிட்டுக் கொண்டிருந்த வேளையில், திடீரென, டீனேஜ் பருவத்திலிருந்த ஒரு கல்லூரி மாணவரைப் போன்ற தோற்றமுடைய ஒருவர், மாணவராகத்தான் இருக்க வேண்டுமென்பது எனது அனுமானம், தன்னுடைய படுக்கையிலிருந்து இறங்கி, அதை அந்த இரண்டாமவருக்கு விட்டுக் கொடுக்க முன்வந்தார். சிறிது நேரத் தயக்கத்திற்குப் பின்னர், அந்த இரண்டாமவர் அதனை ஏற்றுக் கொண்டார்.
என்னுடைய ஆச்சர்யத்தை அதிகப் படுத்தும் விதமாக, அவ்விளைஞர் சற்றும் யோசியாமல், செய்தித் தாளை தரையில் விரித்து அதில் படுத்ததோடல்லாமல், சிறிது நேரத்தில் அமைதியான, ஆழ்ந்த உறக்கத்திற்குள் தொலைந்தே போய்விட்டார். அதற்குப் பின் இதுவரை எதுவுமே நடவாததுபோல் ஒரு அமைதி நிலவியது. நான் 58 வயதாகும் ஒரு தாவரவியல் ஆசிரியர்; இரண்டு தலைமுறை மாணவார்களைக் கையாண்டிருக்கிறேன். பொதுவான அபிப்ராயங்களுக்கு மாறாக, பல சமயங்களில், பெரியவர்களை விடவும், இளைஞர்களே உயர்வான குணமுடையவர்களாக இருக்கிறார்கள்.
(மூலம் : ஃப்ரான்ஸிஸ் சேவியர், ஏற்காடு)
காலத்தினாற் செய்த உதவி :
1962 ஆம் வருடம், அக்டோபர் மாதம், எனது தந்தையார் திடீரென இறந்த வேளை, எனது பத்தாம் வகுப்பு பள்ளிப் படிப்பைத்தான் முடித்திருந்தேன். இனி கல்லூரிப் படிப்பென்பது கேள்விக்கப்பாற்பட்ட விஷயமாக இருந்தது. எனவே அப்போதிருந்த சூழலில், ஒரு குமாஸ்தா உத்யோகத்தைத் தேடிக் கொண்டேன். பத்தாண்டுகள் கடந்த நிலையிலும் அதே குமாஸ்தா உத்யோகம். 1971 ஆம் வருடம், என்னுடைய தனியார் நிறுவனத்தின் நிர்வாகத்தினர், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு மட்டுமே அதிகாரிகளாகப் பதவி உயர்வு அளிக்கப்படும் என அறிவித்தனர். அச்சூழலில் எனக்குத் திருமணமாகி இரண்டு குழநநதைகள், மேற்கொண்டு படித்தால் மட்டுமே பதவி உயர்வு என்ற நிலையில், எனது உத்யோகம் எனக்கு ஒரு சூன்யமாகத் தெரிந்தது. பட்டப் படிப்பில் சேர்வதற்கும், நான் முதலில் பள்ளி மேநிலை இறுதியாண்டை முடிக்க வேண்டுமே!
பள்ளி மேநிலை முதலாண்டில் சேர்வதற்காக, அலிபூர் ரோடு, தில்லியில் இருக்கும் சிபிஎஸ்சி வழி தொலைதூரக் கல்வி அலுவலகத்திற்கு எனது வெஸ்பா ஸ்கூட்டரில் விரைந்தேன். அங்கு எனக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. தபால் மூலமாகத் தொலைதூரக் கல்வியில் பதிவு செய்து கொள்ள அதுவே இறுதி தினம். அந்த அலுவலகத்திலிருந்த அனைத்து விண்ணப்பப் படிவங்களும் விற்றுத் தீர்ந்திருந்தன.
மிகுந்த ஏமாற்றத்துடன், அடுத்து என்ன செய்யலாம் என்று செய்வதறியாது அங்கு குழம்பி நின்று கொண்டிருநநத சமயத்தில், அங்கு வந்த ஒரு முதியவர், என்ன பிரச்சனை என்று கேட்டார். அவரிடம் நடந்ததைக் கூறி, நான் இக்கல்வியில் சேர, மேலும் ஒரு கல்வியாண்டு காத்திருக்க வேண்டும் என்ற சோகத்தைக் கூறினேன்.
பரவாயில்லை, உனக்கு உண்மையாகவே இவ்வயதில் மேலும் படிக்க ஆர்வமிருப்பின், என்னுடன் எனது வீட்டிற்கு வா! அங்கு ஒரு காலிப் படிவம் வைத்திருக்கிறேன், என்றார் அவர்.
அச்சமயம் நேரம் மதியம் 12.30. நிரப்பப்பட்ட படிவங்கள் பெறுவது பகல் 2 மணியோடு முடிந்ததுவிடும். அவருடைய வீடோ 10 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அதுவுமில்லாமல் அறிமுகமில்லாத நபரோடு செல்லவும் ஒருவித தயக்கம்.
எனினும் அச்சூழலில் கிட்டிய ஒரு நம்பிக்கையூட்டக் கூடிய வாய்ப்பைக் கைகழுவ மனமின்றி, அவரைப் பில்லியனில் அமர்த்திக் கொண்டு, அந்த நெரிசலான போக்குவரத்தினூடாக மிகவும் துரிதமாகச் சென்று அவர் வீட்டை அடைந்தேன்.
வீட்டை அடைந்ததும், எனக்கு குடிக்க நீர் கொடுத்து என்னை ஆஸ்வாசப் படுத்தினார். பதட்டப் படாமல் இருக்குமாறு கேட்டு கொண்டு, படிவத்தையும், பேனாவையும் கொடுத்து, அங்கேயே நிரப்புமாறும் கேட்டுக் கொண்டார். பிறகு விரைவாகவும், கவனமாகவும் சென்று படிவத்தைக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். நான் திரும்பவும் அலுவலகத்தை அடைந்த போது நேரம் சரியாக 1.58. எனக்கு முன்னரே மூவர் வரிசையில் படிவத்தைக் கொடுப்பதற்காகக் காத்திருந்தனர். நல்ல வேளையாக, என் படிவத்திற்குப் பிறகு, எவருடையதும் பெறப்பட மாட்டாது என அங்கிருந்த அதிகாரி அறிவித்தார்.
பிறகு மேநிலைப் படிப்பை வெற்றிகரமாக முடித்து, 1975 ஆம் ஆண்டு தில்லி பல்கலையிடமிருந்து பி ஏ பட்டமும் பெற்றேன். பிறகு நான் ஏங்கிய பதவியுயர்வுகளும் பெற்று, 1997 இல் சீனியர் அசிஸ்டெண்ட் மேனேஜராக ஓய்வு பெற்றேன். இன்றளவும், பெயர் கூடக் கேட்க மறந்த, சரியான சமயத்தில் உதவி செய்த அந்தப் பெரியவருக்கு நான் மிகவு கடமைப்பட்டிருக்கிறேன்.
(மூலம் : கோவிந்த் எஸ்.பட்நாகர், புனே)
நன்றி: ரீடர்ஸ் டைஜிஸ்ட், தமிழில் யதிராஜ்
அடுத்த பாகம் நாளை...
Post a Comment