News Update :
Home » » விஜயகாந்த் பிறந்தநாள் உறுதிமொழி Vijayakanth birthday promising to help to people

விஜயகாந்த் பிறந்தநாள் உறுதிமொழி Vijayakanth birthday promising to help to people

Penulis : Tamil on Wednesday 21 August 2013 | 22:14

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது பிறந்த நாளையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வருகிறேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியை பின்பற்றி அவர்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கான நல உதவிகளை இயன்றதை செய்வோம்.

இல்லாதவர்க்கே என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டு செய்து வருகிறார்கள். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன் பெற்று, அவர்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் தே.மு.தி.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள் ஆகும். திரையுலகில் இருந்த காலந்தொட்டு இன்றுவரை ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்த வண்ணம் உள்ளேன்.

கடந்த ஆண்டு மக்களுக்காக மக்கள் பணி என்ற திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான நல உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினேன். கடந்த காலங்களில் வீட்டு மனை நிலங்கள் இலவசமாகவும், முதியோர் இல்லங்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் வீதம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கினேன்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இலவச திருமண மண்டபமும், பெண் சிசுக் கொலையை தடுத்திட பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தின் மூலம் சுமார் 500 பெண் குழந்தைகளுக்கு, அவர்களின் திருமண வயதில் தலா ரூபாய் இரண்டு லட்சம் கிடைக்கும் வகையில் வைப்பு நிதியாகவும், லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் 60 இடங்களில், 600 கணினிகள் கொண்ட இலவச கணினி பயிற்சி மையமும் அமைக்கப்பட்டது.

ஏழைத் தாய்மார்கள் சுய தொழில் செய்வதற்காக 1300 தையல் இயந்திரங்களும், ஏழை சகோதரிகளின் திருமணத்திற்கு உதவிகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், காது கேட்கும் கருவிகளும், சலவைத் தொழிலாளர்களுக்கு சலவை பெட்டிகளும், மாணவ- மாணவிகளுக்கு கல்வி கட்டணங்களும், பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடைகளும், நோட்டுப் புத்தகங்களும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நான் வழங்கி வருகிறேன்.

இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளில் சுமார் 100 பேரை தேர்வு செய்து அவர்கள் பயன்பெறும் வகையில் சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு சக்கரம் பொருத்திய மோட்டார் சைக்கிள் வாகனங்களை அவர்களுக்கு வழங்க இருக்கிறேன்.

மேலும் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு உதவியாக ரூபாய் 50 ஆயிரம் ஆண்டுதோறும் வழங்குவதைப் போல் இந்த ஆண்டும் வழங்க உள்ளேன். தே.மு.தி.க.வின் அமைப்பு ரீதியான 59 மாவட்டங்களிலும் இது போன்று பல நல உதவிகளை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த வறுமை ஒழிப்பு தினத்தில் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

லஞ்சத்தையும், ஊழலையும், வறுமையையும் ஒழிக்க வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுடன் அரசியல் பாதையில் பயணித்து கொண்டிருக்கிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பல்வேறு இன்னல்களையும், வழக்குகளையும் சந்தித்து வருகின்ற நாம், நமக்கு ஏற்படும் சோதனைகளை சாதனைகளாக்கி மக்களுக்கு தொண்டு செய்வோம் என்று இந்த பிறந்தநாளில் உறுதி கூறுகிறேன்.

ஒரு நல்ல எதிர்காலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அமைய நானும், என்னை சேர்ந்த கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் எனது பிறந்த நாளில் சூளுரை மேற்கொள்வோம் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறேன். தமிழ்நாட்டு அரசியலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மலர்ந்துள்ளது.

அதற்காக தமிழ்நாட்டு மக்களுக்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். அதே நேரத்தில் தமிழக மக்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger