News Update :
Home » , » சேரன் மகள் தாமினி பெற்றோருடன் செல்ல சம்மதம் Director Cheran daughter Damini parents consent

சேரன் மகள் தாமினி பெற்றோருடன் செல்ல சம்மதம் Director Cheran daughter Damini parents consent

Penulis : Tamil on Wednesday, 21 August 2013 | 04:36

டைரக்டர் சேரனின் 2-வது மகள் தாமினி, சூளைமேட்டைச் சேர்ந்த நடன கலைஞர் சந்துரு காதல் விவகாரம் கோர்ட்டு வரை சென்றது. தாமினி 2 வாரங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி சந்துரு குடும்பத்தினருடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்தார். அதில் காதலன் சந்துருவை கொலை செய்ய முயற்சிப்பதாக தந்தை சேரன் மீது புகார் கூறினார்.


இதை மறுத்த டைரக்டர் சேரன் சந்துருவின் நடவடிக்கை சரியில்லை. எனவேதான் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இது தொடர்பாக கண்ணீர் மல்க பேட்டி அளித்த சேரன் தனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். காதலுக்கு நான் எதிரி இல்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து சேரனின் மகள் தாமினிக்கு பெண் போலீசார் கவுன்சிலிங் அளித்தனர். கல்லூரி படிப்பை முடித்த பின்னர் காதலை பற்றி சிந்திக்கலாம் என்று அறிவுரை கூறினர். ஆனால் தாமினி காதலன் சந்துருவுடன்தான் செல்வேன் என்று பிடிவாதமாக கூறினார். இதனால் அவரை போலீசார் காப்பகத்தில் தங்க வைத்தனர்.

இதற்கிடையே சந்துருவின் தாய் ஈஸ்வரி ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் 2 வாரங்களுக்கு தாமினி, தான் படித்த பள்ளி தலைமை ஆசிரியை பி.கே.கே.பிள்ளை வீட்டில் தங்கி இருக்க உத்தரவிட்டனர். இதன்படி கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக அவர் தனது குடும்பத்தினரை பிரிந்து தலைமை ஆசிரியை வீட்டில் தங்கினார். இன்று இந்த வழக்கு ஐகோர்ட்டில் நீதிபதிகள் பி.தனபாலன், செல்வம் ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதையொட்டி காலை 11 மணிக்கு தாமினியை தலைமை ஆசிரியை கோர்ட்டுக்கு அழைத்து வந்து இருந்தார். டைரக்டர் சேரனும் கோர்ட்டுக்கு வந்தார். அவருடன் டைரக்டர்கள் அமீர், கரு.பழனியப்பன் உள்பட 100-க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வந்திருந்தனர். அவர்களை உள்ளே அனுப்புவதில் சலசலப்பும் தள்ளு முள்ளும் ஏற்பட்டது.

சந்துரு தரப்பில் தாய் ஈஸ்வரி, 2 சகோதரிகள் வந்திருந்தனர். நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தாமினி நீதிபதிகளைப் பார்த்து தெரிவித்தார். இதற்கு சந்துருவின் வக்கீல் சங்கரசுப்பு எதிர்ப்பு தெரிவித்தார். தாமினி மன அழுத்தத்தில் இருக்கிறார். முன்பு காதலனுடன் செல்ல சம்மதித்தவர் இப்போது மாற்றிச் சொல்கிறார். இதற்கு பெற்றோர் நிர்ப்பந்தமே காரணம். 2 வார காலத்தில் அவரது மனதை மாற்றி விட்டார்கள் என்றார்.

உடனே நீதிபதிகள் குறுக்கிட்டு, தாமினி மேஜர் பெண். அவர் பெற்றோருடன் செல்ல சம்மதித்து இருக்கிறார். அவர் சொல்வதைத்தான் எங்களால் ஏற்க முடியும் என்றனர். தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், தாமினிக்கு இன்னும் திருமணம் நடை பெறவில்லை. அதற்கு முன் அவர் மீது உரிமை கொண்டாட முடியாது. திருமணம் முடிந்து இருந்தால் கணவருடன் செல்வது பற்றி முடிவு எடுக்கலாம். திருமணம் ஆகாத பெண் பெற்றோருடன் செல்ல முடிவு எடுக்கும் போது அதைத்தான் கோர்ட்டு ஏற்க முடியும் என்றனர்.

வக்கீல் சங்கரசுப்பு வாதாடுகையில், தாமினி மனக்குழப்பத்தில் இருக்கிறார். அவரை மனநல பரிசோதனைக்கு அனுப்பலாம். 2 வாரமாக அவரை சட்ட விரோதமாக காவலில் வைத்து இருந்தனர். சினிமா பிரமுகர்கள் போய்பார்த்து அவர் மனதை மாற்றி விட்டார்கள் என்றார். உடனே நீதிபதிகள், எல்லோருடைய கருத்துக்களையும் கேட்ட பின்புதான் தலைமை ஆசிரியையுடன் அனுப்ப உத்தரவிட்டோம். இப்போது எங்கள் மீதே குற்றம் சுமத்துகிறீர்களா? என்று வக்கீலைப் பார்த்து கேட்டனர். அதற்கு வக்கீல், 2 வாரத்தில் ஏராளமான சினிமாகாரர்கள் பார்த்து மனமாற்றம் செய்து விட்டார்கள் என்று சொல்லவந்தேன். இந்த விவகாரத்தில் திரும்பவும் மனு தாக்கல் செய்கிறோம் என்றார்.

இதையடுத்து பிற்பகல் 1 மணிக்கு மனுதாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர். வக்கீல் சங்கரசுப்பு மனு தாக்கல் செய்த பின்பு நீதிபதிகள் அதில் தீர்ப்பு வழங்குகிறார்கள்.

முன்னதாக, சேரன் தனது பேஸ்புக் பக்கத்தில், இன்று என் பொக்கிஷம் திரும்பி வரும் நாள். அவள் இந்த உலகிற்கு வந்த நாளில் எவ்வளவு பயமும் பதட்டமும் இருந்ததோ அதைவிட 100 மடங்கு இன்று. இன்று நான் காணப்போகும் வெற்றி எனக்கானது மட்டும் அல்ல. இவ்வுலகில் உள்ள அனைத்து பெற்றோர்களுக்குமானது என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தாமினி பெற்றோருடன் செல்ல சம்மதம் தெரிவித்திருப்பது சேரனுக்கு மேலும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger