News Update :
Home » , » இளவரசன் சாவு தற்கொலை: டெல்லி டாக்டர்கள் குழு உறுதிப்படுத்தியது

இளவரசன் சாவு தற்கொலை: டெல்லி டாக்டர்கள் குழு உறுதிப்படுத்தியது

Penulis : Tamil on Wednesday 17 July 2013 | 23:06

கருகிபோன இளவரசன் திவ்யா காதல்!

இளவரசன் கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? உண்மையில் நடந்தது என்ன? ஒட்டு மொத்த தமிழகமும் இந்த கேள்விகளுக்கு விடை தேடியது. பொதுவாக ஒரு தற்கொலை என்றால் இ.பி.கோ. 174 பிரிவில் வழக்கு பதிவு செய்து அனாயசமாக கையாளும் போலீசார் இந்த வழக்கை அவ்வளவு எளிதாக கையாள முடியவில்லை. இடையில் புகுந்த சாதியும், சந்தேகமும் நீதி தேவன் கோவிலில் மண்டியிட்டது.


உண்மையை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சென்னை ஐகோர்ட்டும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. தலைநகர் டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனையின் புகழ் பெற்ற டாக்டர்கள் குழு வரவழைக்கப்பட்டு இளவரசன் உடல் மறு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மருத்துவகுழுவின் அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் நகல் தர்மபுரி கோர்ட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இளவரசன் மரணம் பற்றி விசாரணை நடத்திவரும் தனிப்படை போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து பிரேத பரிசோதனை அறிக்கையை இன்று வாங்க உள்ளனர். அந்த மருத்துவ பரிசோதனை அறிக்கை விபரம் வெளியாகி உள்ளது. இளவரசன் ஓடும் ரெயிலில் அடிபட்டு தலை, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்துள்ளார்.

ரெயிலில் தள்ளிவிட்டோ அல்லது துன்புறுத்தியோ கொன்றதற்கான எந்தவித மூகாந்திரமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். இளவரசனின் குடல் பகுதி ரசாயன பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. குடல் பரிசோதனையில் அவர் இறப்பதற்கு முன்பு மது குடித்து இருந்தது தெரியவந்துள்ளது. உடல் பரிசோதனை முடிவு ஒருபுறம் இருக்க இன்னொரு புறத்தில் தனிப்படை போலீசார் ஒவ்வொரு சந்தேகத்தையும் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்து அதற்கான ஆவணங்களையும் திரட்டி வருகிறார்கள்.

இளவரசனின் செல்போனை போலீசார் கைப்பற்றி கடைசியாக அவர் யார் யாரிடமெல்லாம் என்ன பேசி இருக்கிறார் என்ற தகவல்களையும் சேகரித்துள்ளனர். இளவரசன் கடந்த 4–ந் தேதி தற்கொலை செய்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு தனது நண்பர்கள் மனோஜ்குமார், கார்த்திக் ஆகியோரை போனில் தொடர்பு கொண்டு இனி எனக்கு வாழ பிடிக்க வில்லை. தற்கொலை செய்ய போகிறேன் என்று கூறி இருக்கிறார். அந்த பேச்சு விபரங்களை தடயவியல் துறையினர் சேகரித்துள்ளனர்.

மனோஜ்குமார், கார்த்திக் இருவரும் இதுபற்றி அரூர் கோர்ட்டில் மாஜிஸ் திரேட்டு முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர். இதே போல் இளவரசன் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது உறவினர் அறிவழகனுக்கு போன் செய்து, திவ்யா இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்து பார்க்க முடிய வில்லை. நான் மதுகுடித்து இருக்கிறேன். சாகப்போகிறேன் என்று கூறி இருக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அறிவழகன் ஆறுதல் கூறி அந்த மாதிரி முடிவு எடுக்காதே உடனே வீட்டுக்கு வா என்று அழைத்து இருக்கிறார். போலீசார் விசாரணையில் அறிவழகன் இதை தெரிவித்து இருக்கிறார்.

தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி இருந்தனர். அந்த கடிதத்தில் என் சாவுக்கு யாரும் காரணமில்லை என்று குறிப்பிட்டு தன் காதலின் ஆழத்தை உருக்கமாக குறிப்பிட்டு இருந்தது. அந்த கடிதமும் இளவரசன் எழுதியதுதான் என்பதை தடயவியல் துறையினர் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஐகோர்ட் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த போது இளவரசன் சென்னை தியாகராய நகரில் ஒரு லாட்ஜில் தங்கி இருக்கிறார். திவ்யா தன்னோடு வருவார் என்று எதிர்பார்த்த இளவரசன் திவ்யாவின் முடிவால் மனம் உடைந்து இருக்கிறார். லாட்ஜ் அறையில் வைத்து பிளேடால் தனது கை மணிக்கட்டில் அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அதை பார்த்த லாட்ஜ் ஊழியர் சந்தோஷ் என்பவர் இளவரசனுக்கு ‘பேன்ட்எய்டு’ வாங்கி கட்டு போட்டு இருக்கிறார். வடமாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் இதுபற்றி அரூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வாக்கு மூலம் கொடுத்து இருக்கிறார். அவர் இந்தியில் சொல்ல சொல்ல இரண்டு ஆசிரியர்கள் அதை மொழி பெயர்த்து இருக்கிறார்கள்.

திவ்யா வருவாளா? வர மாட்டாளா? என்று தவித்து கொண்டிருந்த இளவரசன் தற்கொலை செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பும் திவ்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அப்போது, நீ இல்லாமல் நான் வாழமாட்டேன். நீ வரா விட்டால் நான் தற்கொலை செய்து விடுவேன் என்று கூறி இருக்கிறார். இந்த உரையாடலையும் தடயவியல் துறையினர் சேகரித்துள்ளனர். சாதிகளை கடந்து செண்பக பூவாய் அவர்கள் காதல் பூத்து மணம் வீசியது. ஆனால் பாதியிலேயே கருக்கப்பட்ட காதலால் இளவரசன் தன் வாழ்க்கையும் பாதியிலேயே முடித்து கொண்டார்.

ஒரு காதல்... ஒரு மோதல்... ஒரு சாதல்... இந்த மாதிரி துயரங்கள் இனியும் தொடர வேண்டாம். ஒருவரோடு ஒருவர் காதலோடு களிப்புற்று வாழ்வோம்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger