போலீஸ் விசாரணையின்போது ஆசிரியை உமா மகேஸ்வரியை எதற்காக கொலை செய்தார் என்று கைதான மாணவர் முகமது இஸ்மாயில் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
9ம் வகுப்பு மாணவர் முகமது இஸ்மாயில் இந்தி ஆசிரியை உமா மகேஸ்வரியை வகுப்பறையில் வைத்து கத்தியால் குத்திக் கொன்றார். இதையடுத்து அந்த மாணவர் மீது சட்டக்கல்லூரி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரை ரகசியை இடத்தில் வைத்து விசாரித்தபோது பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு,
நான் சென்னை ஏழுகிணறு தெருவில் பெற்றோருடன் வசித்து வருகின்றேன். என் தந்தை கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். எனக்கு இந்தி பாடம் அவ்வளவாக வராது. அதனால் ஆசிரியை உமா மகேஸ்வரி என்னை திட்டிக் கொண்டே இருப்பார். அது எனக்கு பிடிக்காது. மேலும் நான் சரியாகப் படிப்பதில்லை என்று ரிப்போர்ட் கார்டில் 3 முறை எழுதினார். அதைப் பார்த்து எனது பெற்றோர்கள் திட்டினார்கள். அவரால் நான் திட்டு வாங்க வேண்டியதாகிவிட்டது.
இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்து எனது வீட்டருகே உள்ள கடையில் ரூ. 20 கொடுத்து கத்தி வாங்கினேன். இந்நிலையில் உமா மகேஸ்வரி இந்தி ஸ்பெஷல் வகுப்பு நடத்தப் போவதாகக் கூறினார். அப்பொழுதே அவரை கொல்வது என்று தீர்மானித்தேன்.
காலை 11 மணிக்கு வகுப்புக்கு வரச் சொன்னார். ஆனால் நான் 10.50 மணிக்கே சென்றேன். அப்போது வகுப்பில் யாரும் இல்லாததால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கத்தியால் குத்தினேன்.
நான் இப்படி செய்வேன் என்பதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. டேய் இப்படி செய்துவிட்டாயே என்று மட்டும் கூறினார். மேலும் தன்னைக் காப்பாற்றுமாறும் கத்தினார். அவரைக் கொன்றவுடன் தப்பிக்க முயலவில்லை. தண்டனையை ஏற்பது என்று முடிவு செய்தேன் என்றார்.
இந்த சம்பவம் குறித்து கொலை நடந்த புனித மேரீஸ் பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர் பாதிரியார் போஸ்கோ கூறியதாவது,
எங்கள் பள்ளியில் நடந்த துயரச்சம்பவத்தால் எங்களுக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது. இறந்த ஆசிரியை உமா மகேஸ்வரி மிகவும் நல்லவர். அவர் மாணவர்களை தரக்குறைவாக நடத்துபவர்கள் அல்ல என்று தான் பிற மாணவர்கள் தெரிவி்த்துள்ளனர். அவர் கண்டிப்பாக இருந்தாலும் மாணவர்களிடம் அன்பாகவும் இந்துள்ளார் என்றே பிற மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
முகமது இஸ்மாயில் பள்ளிக்கு ஒழுங்காக வந்தாலும் சரியாக படிக்கமாட்டார். இதை ஆசிரியை ரிப்போர்ட் கார்டில் குறிப்பட்டதால் இஸ்மாயில் கோபம் அடைந்துள்ளார். கோபத்தின் விளைவாக இந்த விபரீதம் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் திங்கட்கிழமை வரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இனி வரும் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Post a Comment