ஐபிஎல் போட்டித் தொடரின் 20-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ராகுல் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சங்ககாரா தலைம� ��யிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோதின.
ராஜஸ்தான் அணி இதுவரை தான் ஆடிய 5 ஆட்டங்களில் 3 வெற்றியும், 2 தோல்வியும் பெற்றுள்ளது. டெக்கான் அணி இதுவரை தான் ஆடிய இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியைடைந்து இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கின.
ராஜஸ்தான் அணியில் கடந்த போட்டியில் விளையாடிய கோஸ்வாமி நீக்கப்பட்டு, திஷாந்த் யாக்னிக் சேர்க்கப்பட்டுள்ளார். டெக்கான் அணியில் கடந்த போட்டியில் விளையாடிய பார்த்தீவ் படேல், ரவிதேஜா, கேமரூன் ஒயிட் ஆகியோர் நீக்கப்பட்டு, ஜேபி டுமி� ��ி, தன்மயி மிஸ்ரா, அபிஷேக் ஜுன்ஜுன்வாலா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டாஸ் வென்ற டெக்கான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக குமார் சங்ககாராவும் ஷீகர் தவானும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய சங்ககாரா 44 ரன்களும், ஷீகர் தவான் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களையடுத்து ஜோடி சேர்ந்த டேனியல் கிறிஸ்டியனும் ஜே.பி.டுமினியும் அதிரடியைக் கைவிடவில்லை.
குறிப்பாக ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை ஜே.பி.டுமினி சிதறடித்தார். 26 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 58 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டேனியல் கிறிஸ்டியன் 19 ரன்களில் 29 ரன்கள் குவித்து இவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டெக்கான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
துவக்க வீரர்களாக அஜின்கியா ரஹானேவும் ராகுல் டிராவிட்டும் களமிறங்கினர். அதிரடியில் கலக்கிய அவர் 24 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகள் உள்பட 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெனேரியா 22 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஓவைஸ் ஷா ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் தங்கள் பங்கிற்கு அதிரடி ஆட்டம் ஆடினர். ரஹானே 44 ரன்களிலும், ஓவைஸ் ஷா 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களையடுத்து வந்த ஜேகன் போத்தா 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் பிராட் ஹாட்ஜும் யாக்னிக்கும் ஜோடி சேர்ந்தனர். பிராட் ஹாட்ஜ் கடைசி நேரத்தில் அணிக்கு கைகொடுத்தார். அவர் 21 பந்துகளில் 48 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பாடுபட்டார்.
கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசிய யாக்னிக் அணியை வெற்றி பெற வைத்தார்.
இறுதியில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்த ராஜஸ்தான் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெக்கான் அணியை வீழ்த்தியது.
இதனால் டெக்கான் அணி தொடர்ந்து ஆடிய 3 ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு இது 4 வது வெற்றியாகும். இதனால் 8 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Post a Comment