அந்தரங்கம், மீண்டும் கோகிலா, ஜானி, முந்தானை முடிச்சு, மாந்தோப்பு கிளியே உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர், தீபா. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் கவர்ச்சி நாயகியாகவும், ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் வலம் வந்தவர். இவர், இப்போது பாட்டியாகி விட்டார். தீபாவின் கணவர் ரெஜாய் கல்லூரி பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
தீபா-ரெஜாய் தம்பதிக்கு ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கிறார். அவர் கேரளாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மானேஜராக இருக்கிறார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவி பெயர், ரஞ்சனி. இவர்களுக்கு ஒரு வயதில் ரீஹான் என்ற மகன் இருக்கிறான். ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்த தீபா, நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு இப்போது 50 வயது ஆகிவிட்டது. திருமணமாகி 30 வருடங்கள் ஆகிவிட்டன. நான் இன்னும் இளமையாகவும், அழகாகவும் இருப்பதாக எல்லோரும் பாராட்டுகிறார்கள். அது இறைவன் எனக்கு அளித்த வரம். `அந்தரங்கம்' படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானேன். கடைசியாக நான் நடித்த தமிழ் படம், `முந்தானை முடிச்சு.' அதன்பிறகு குடும்பத்தை கவனிக்க வேண்டியிருந்ததால், நடிப்பதை நிறுத்தி விட்டேன்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கல்லூர் என்ற இடத்தில், கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். இப்போதும் எனக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு குடும்பம் முக்கியம். அதனால் இனிமேல் நடிக்க மாட்டேன். ஜனங்கள் என்னை இன்னும் ஞாபகம் வைத்திருப்பதற்காக நன்றி. என் மகனுக்கு நடிப்பதில் ஆர்வம் இருக்கிறது.
அவனை சினிமாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்திருக்கிறேன். மகனைப்போல் பேரனையும் சினிமாவில் நடிக்க வைக்க நான் ஆசைப்படுகிறேன். நான் நடிகை ஆனதற்காக ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. பெருமைப்படுகிறேன். இப்போது நடிக்கவில்லை என்றாலும், தியேட்டர்களுக்குப்போய் நிறைய சினிமா பார்க்கிறேன்.
அங்காடித்தெரு, நாடோடிகள் ஆகிய இரண்டு தமிழ் படங்களையும் சமீபத்தில் பார்த்து ரசித்தேன். எனக்கு பிடித்த நடிகை, ஸ்ரீதேவி. என் சக கால கதாநாயகி அவர். பழைய நடிகைகள் ஷீலாவும், சாரதாவும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். தினமும் நான் `பைபிள்' படிக்கிறேன். தியானம் செய்கிறேன். கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வருகிறேன். மிக சிறந்த சமூக சேவகியாக வரவேண்டும் என்று எனக்கு ஆசை. ஏழைகளுக்கும், முதியோர்களுக்கும் சேவை செய்ய விரும்புகிறேன்.
இவ்வாறு தீபா கூறினார்.
Post a Comment