சுவிட்சர்லாந்து வலைஸ் மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 28பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 22பேர் சிறுவர்களாவர். இச்சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை இரவு 9.30மணியளவில் வலைஸ் மாநிலத்தின் இத்தாலி நாட்டு எல்லைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஏ9 அதிவேக பாதையிலேயே இந்த விபத்து இடம்பெற்றிருக்கிறது.
குகை ஊடான பாதை ஒன்றிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பெல்ஜியத்திலிருந்து இத்தாலிக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கி உள்ளனர். 52பேர் பயணம் செய்த இந்த பஸ்ஸில் 28பேர் பலியானதுடன் ஏனைய அனைவரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் இடம்பெற்று காயமடைந்தவர்கள் உலங்குவானூர்தி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர்.
குகைக்குள் இந்த விபத்து ஏற்பட்டதால் மீட்பு பணிகள் இன்று காலை வரை இடம்பெற்றது. தற்போது இப்பாதை போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் லவுசான், பேர்ன் பல்கலைக்கழக போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment