ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை தோற்கடிக்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆபிரிக்க நாடுகளுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
அமெரிக்கா வரைந்த சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆபிரிக்க நாடான கெமரூன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கலாம் என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதையடுத்து கடந்தமாத பிற்பகுதியில் ஜெனிவா சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அங்கிருந்து ஆபிரிக்க நாடுகளுக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டார்.
முதலில் உகாண்டாவுக்கும் பின்னர், நைஜீரியா, தென்னாபிரிக்கா, கெமரூன் உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளுக்கும் அவர் பயணம் மேற்கொண்டு சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைத் தோற்கடிக்க ஆதரவு திரட்டினார்.
கெமரூன் பிரதமர் பிலெமொன் யாங் மற்றும் நைஜீரிய வெளிவிவகார அமைச்சர் ஒலுக்பெங்கா அயோடேஜி அசிருவுடனும் அவர் பேச்சுக்களை நடத்தினார்.
ஆனாலும் இந்தப் பேச்சுகளின் மூலம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரினால் எதையும் சாதிக்க முடியாது போயுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் கோரிக்கைகளை புறக்கணித்து விட்டு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க கெமரூனும், நைஜீரியாவும் முன்வந்துள்ளன.
அத்துடன் இந்தத் தீர்மானத்துக்கு நோர்வேயும். பிரான்சும் இணை அனுசரணை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment