News Update :
Home » » வென்றது விராத் திட்டம்! * பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி

வென்றது விராத் திட்டம்! * பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி

Penulis : karthik on Tuesday, 20 March 2012 | 03:32

மிர்புர்:""பெரிய இலக்குகளை விரட்டும் போது கைவசம் விக்கெட்டுகள் இருந்தால், எதிரணிக்கு நெருக்கடி ஏற்படும். இந்த திட்டத்தை பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்படுத்தி, வெற்றி பெற்றோம்,'' என, இந்திய அணியின் துணைக் கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்தார்.
நான்கு நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், வங்கதேசத்தில் நடக்கிறது. இதில் பாகிஸ்தானுக்கு எதிரான கட்டாயம் வெல்ல வேண்டிய முக்கிய லீக் போட்டியில், விராத் கோஹ்லி 148 பந்துகளில் 183 ரன்கள் எடுத்து, இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார்.
இதுகுறித்து விராத் கோஹ்லி கூறியது:
பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த 2, 3 போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடவில்லை. இது எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது. இம்முறை எப்படியும் நன்கு விளையாட வேண்டும் என திட்டமிட்டு இருந்தேன்.
பொதுவாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்பது எப்போதும் கடும் நெருக்கடியானது. தவிர, எல்லோரது கண்களும் இப்போட்டியின் மீதே இருந்தது. இந்நிலையில் பேட்டிங்கின் போது அதிக பதட்டம் இருந்தது. மற்றபடி, எவ்வித நெருக்கடியும் இல்லை என்றும் கூற முடியாது.
விக்கெட் முக்கியம்:
ஹோபர்ட்டில் 133 ரன்கள் எடுத்ததை, இந்த போட்டியுடன் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டும் சமமல்ல என்பது தான் உண்மை. ஏனெனில் பாகிஸ்தானுக்கு எதிரான இப்போட்டி, எங்களுக்கு மிகவும் "ஸ்பெஷலானது'. அணியில் மூன்றாவது இடத்தில் களமிறங்குவது என்பது மிக முக்கியமானது. இப்போது எனது விக்கெட்டின் முக்கியத்துவத்தை நன்கு தெரிந்து கொண்டேன்.
சரியான திட்டம்:
இரண்டாவது பந்தில் விக்கெட் விழுந்து இருந்ததால், நல்ல "பார்ட்னர்ஷிப்' அமைத்து விளையாட திட்டமிட்டோம். 300 அல்லது அதற்கு மேல் எந்த இலக்கைத் துரத்தும் போதும், கடைசி நேரத்தில் அதிக விக்கெட்டுகள் இருந்தால், எதிரணிக்கு நெருக்கடி ஏற்பட்டு விடும். இதை சரியாக திட்டமிட்டு செயல்படுத்தினோம். அணி வெற்றி பெறும் வரை களத்தில் இருக்க வேண்டும் என நினைத்தோம். இதற்கேற்ப, மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் விளையாடினோம். கடைசியில் வெற்றி கிடைத்தது.
போட்டிக்கு இடையே "ஸ்கோர்போர்டை' பார்த்த போது, இரட்டை சதம் அடிப்பது குறித்து லேசான எண்ணம் தோன்றியது. இது சில விநாடிகளே நீடித்தது. இதன் பின், அணிக்கு வெற்றி தேடித்தருவது தான் முக்கியம். இதுதான் நமது வேலை என, எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அதன் பின் பந்துகளை அடித்து நொறுக்கினேன்.
பெரும்பாலும் 40 அல்லது 42 ஓவர்களுக்குள் அவுட்டாகி விடுவேன். சதம் அடித்த பின் பெரிய அளவில் ரன்கள் சேர்த்தது இல்லை. இதனால், பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில், சற்று கூடுதல் நேரம் நிலைத்து விளையாட வேண்டும் என தீர்மானித்து இருந்தேன்.
சர்வதேச கிரிக்கெட்டில் மிக விரைவாக 11 சதம் அடித்து விட்டதால், எவ்வித லட்சியத்தையும் அடையும் எண்ணம் எல்லாம் இல்லை. ஒவ்வொரு வாய்ப்பு கிடைக்கும் போதும் அணிக்கு சிறப்பான முறையில் திறமை வெளிப்படுத்த வேண்டும். இது தான் எனது முதல் லட்சியம்.
இவ்வாறு விராத் கோஹ்லி தெரிவித்தார்

அதிர்ஷ்டம் கிடைக்குமா
சமீபத்திய முத்தரப்பு தொடரில், இலங்கைக்கு எதிராக 321 ரன்கள் என்ற இலக்கை, 40 ஓவரில் எட்டினால் தான், பைனல் வாய்ப்பு குறித்து யோசிக்கலாம் என்ற நிலையில், கோஹ்லி 133 ரன்கள் விளாசினார். கடைசியில் ஆஸ்திரேலியாவை இலங்கை வெல்ல, இந்தியா வெளியேற நேர்ந்தது.
நேற்று முன்தினம், 330 ரன்கள் எடுத்து, பாகிஸ்தானை வீழ்த்தினால், பைனல் வாய்ப்பு குறித்து பார்க்கலாம் என்ற நிலையில், கோஹ்லி (183) சதம் கைகொடுத்தது. இன்று இலங்கை வென்றால் மட்டுமே, பைனல் வாய்ப்பு என்ற நிலையில், இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்க வேண்டும்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger