தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தம்மை கேப்டன் என்று அழைத்துக் கொள்கிறார்... அவர் எந்த விளையாட்டுக்கு கேப்டனாக இருந்தார்? அல்லது ராணுவத்துக்கு கேப்டனாக இருந்தாரா? என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற பா.ம.க. மாணவர் சங்க மாவட்ட மாநாட்டில் அன்புமணி பேசியதாவது:
தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களைத் தீட்டி, அதை செயல்படுத்தும் வல்லமை படைத்த ஒரே கட்சி பா.ம.க. மட்டுமே. தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சிகள், ஆட்சி செய்து முடித்து விட்ட பிறகு மீண்டும் அடுத்த தேர்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கும். ஆனால், பா.ம.க. -வுக்கு, அடுத்த தேர்தல் முக்கியம் இல்லை. அடுத்த தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம் .
விஷன் 2023/
தமிழகத்தை, 45 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் செய்த சாதனைகள் என்ன? சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதா, 2023 தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு, 15 ஆயிரம் லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டுமாம். தமிழகம் தற்போது, 1 லட்சத்து 19 கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளது. தமிழகத்தில் வசிக்கும், 7.25 கோடி மக்களில் ஒருவரின் மீது, 17 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. இந்த நிலையில், தொலைநோக்கு திட்டத்துக்கான நிதியை எப்படி திரட்ட முடியும் ? தற்போது தமிழக அரசுக்கு வருமானம் என்பது டாஸ்மாக் மட்டுமே, இதை வைத்து கொண்டு இந்த நிதியை திரட்ட முடியுமா.
கேப்டனா?
தமிழகத்தில், மது, சினிமா போன்ற தேவையற்ற கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற திட்டத்தில் பாமக உறுதியாக உள்ளது. தி.மு.க. - அ.தி.மு.க. தே.மு.தி.க. போன்ற அனைத்து கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். சினிமா பார்ப்பது தவறு அல்ல. ஆனால், அதை கலாசாரமாகக் கருதி கடைபிடிக்கக் கூடாது. தமிழகத்தில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என, சினிமாக்காரர்கள் தான்அதிகம் உள்ளனர்.
கேப்டன் என்கின்றனர், அவர் என்ன புட்பால் கேப்டனா, அல்லது வாலிபால் கேப்டனா, அல்லது ராணுவக் கேப்டனா, நான் கூட இந்த விளையாட்டுக்கு எல்லாம் கேப்டனாக செயல்பட்டுள்ளேன்.
பாமக, ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்தே, பூரண மதுவிலக்கை அமுதல் படுத்துவோம் என்பதுதான் என்றார் அவர்.
Post a Comment