தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களின் நிலவரம் குறித்த விவரங்களை மூன்று நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் மறு ஆய்வு மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கோ, உச்ச நீதிமன்றத்துக்கோ மாற்றக் கோரும் மனு மீது பின்னர் விசாரணை நடத்தப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தேவேந்திரநாத் புல்லரின் மறுஆய்வு வழக்கு, நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, சுதான்ஷு ஜோதி முகோபாத்யாய ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் விவரங்களை மத்திய அரசு இதுவரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதற்குப் பதில் அளித்த மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் சித்தார்த் தவே, ""கருணை மனுக்களின் விவரங்களை அளிக்கக் கோரி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் அதற்கு இன்னும் பதில் வரவில்லை´´ என்று கூறினார்.
கருணை மனுக்கள் தாக்கல் செய்து 8 ஆண்டுகள் முதல் 11 ஆண்டுகள் வரை கடந்த பிறகு அவற்றின் மீது இன்னும் முடிவு செய்யாமல் இருக்கும் நடவடிக்கை ஏற்புடையதாக இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி கருணை மனு தாக்கல் செய்தவர்கள் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளன. அதனாலும் காலதாமதம் ஏற்படுவதாக கூடுதல் தலைமை வழக்குரைஞர் தெரிவித்தார். ஆனால், அவரது விளக்கத்தை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.
கருணை மனுக்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் அனைத்து மாநில உள்துறைச் செயலர்கள் மூன்று நாள்களுக்குள் தபால், தொலைபேசி அல்லது பிரதிநிதிகள் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
இதைத் தொடர்ந்து, புல்லர் தொடர்பான மறு ஆய்வு வழக்கில் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 1ம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் மறுஆய்வு மனு:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் கடந்த ஆண்டு நிராகரித்தார். இதையடுத்து, தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகிறது.
"இந்த வழக்கில், நீதிபதி, வழக்குரைஞர்கள், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரும் தமிழ் மொழி பேசுபவர்கள். அதனால், வழக்கை வேறு மாநில உயர் நீதிமன்றத்துக்கோ, உச்ச நீதிமன்றத்துக்கோ மாற்ற வேண்டும்´´ என்று கோரி மூப்பனார் பேரவைத் தலைவர் எல்.கே. வெங்கட் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
எல்.கே. வெங்கட் தாக்கல் செய்த மனு தொடர்பாக, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் ராம் ஜேட்மலானி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் ஆஜராகி வருகிறார்கள்.
வெங்கட் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நந்தகுமார், புல்லர் வழக்குடன் தமது கட்சிக்காரரின் மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால், புல்லர் வழக்கில் முடிவு செய்த பிறகே, வெங்கட் மனு மீது வேறு திகதியில் விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
Post a Comment