புதுவை நாம் தமிழர் கட்சியின் சார்பில் தானே புயலால் பாதிக்கப்பட்ட புதுவையை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த நிவாரண உதவியை மேலும் உயர்த்த வேண்டும். நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் சீமான் தலைமை வகித்தார். வேலுச்சாமி வரவேற்றார். புதுவை நிர்வாகிகள் அன்பு தென்னரசன், லோகு அய்யப்பன், தந்தைபிரியன், அருமைதாசன், வத்சலா, கவுரி, ரமேஷ், கலைச்செல்வம், இளங்கோ, அய்யநாதன், நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து இயக்குனர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரியில் புயலினால் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவு பாதிப்பு ஏற்பட்டது. கடலூரில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் மத்திய அரசு ரூ.500 கோடியை இடைக்கால நிவாரணமாக அறிவித்துள்ளது சரியான தல்ல. மத்திய அரசு மாநில அரசு கோரிய தொகையில் 50 சதவீதமாவது தந்தால் தான் நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும்.
மத்திய அமைச்சர் சிதம்பரம் புதுவையில் பார்வையிட்டார், கடலூருக்கு செல்ல வில்லை. மத்தியக்குழுவும் வந்து பார்வையிட்டு சென்றது. இவர்கள் என்ன சொன்னார்கள்? என தெரியவில்லை. கடமைக்கு வந்து பார்வையிட்டு சென்றதுபோல் உள்ளது.
மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு தனது கட்சி ஆளும் மாநிலங்கள் மற்றும் கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் சலுகைகள் தருகிறது. வேறு கட்சிகள் ஆளும் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை வஞ்சிக்கும் நோக்கில் செயல்படுவது தவறானது, கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment