சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது 42). இவர் பாரிமுனை ஆர்மேனியன் தெருவில் உள்ள செயிண்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இந்தி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இன்று பகல் 12 மணியளவில் 10-ம் வகுப்பில் இந்திப்பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது 9-ம் வகுப்பில் படிக்கும் முகமது இர்பான் என்ற மாணவன் திடீரென வகுப்பறையில் புகுந்தார்.
மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியை நோக்கி ஆவேசத்துடன் ஓடினான். இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த உமா மகேஸ்வரி அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக வகுப்பறையை விட்டு வெளியே ஓடினார். ஆனால் வெறி பிடித்தவன்போல் துரத்தியபடி முகமது இர்பான் விரட்டினான்.
வகுப்பறை வாசலிலேயே ஆசிரியை உமா மகேஸ்வரியை சரமாரியாக குத்தினான். இதில், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ஆசிரியை உமா மகேஸ்வரி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.
அதைப்பார்த்ததும் வகுப்பறைகளில் இருந்த மற்ற மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் மாணவன் இர்பான் தப்பி ஓட முயன்றான். ஆனால் அவர்கள் அவனை மடக்கிப் பிடித்தனர். பள்ளி வளாகத்திலேயே மாணவனால் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவன் இர்பானை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மாணவன் இர்பான் ஒழுங்காக படிப்பதில்லை.அவனது படிப்பு குறித்த பதிவேட்டிலும் சரியாக படிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தது. இதனால் ஆசிரியை உமா மகேஸ்வரி இர்பானை கண்டித்தார். இதனால் இர்பான் ஆசிரியை மீது கடும் கோபத்தில் இருந்தான். அவரை பழி வாங்க திட்டமிட்டு இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
பலியான உமா மகேஸ்வரியின் உடலில் கழுத்து உள்பட 5 இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது.அவருக்கு கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
Post a Comment