News Update :
Home » » தமிழர் திருநாள்: ஆளுநர் - முதல்வர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து

தமிழர் திருநாள்: ஆளுநர் - முதல்வர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து

Penulis : karthik on Saturday, 14 January 2012 | 10:16

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர்
ஜெயலலிதா மற்றும் அரசியல் தலைவர்கள் தமிழக மக்களுக்கு தங்கள்
வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தை முதல் தேதியை தமிழர்கள் உழவர் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். ஜனவரி
15-ம் தேதி தை மாதம் பிறக்கிறது. தமிழரின் ஆண்டுக் கணக்கான
திருவள்ளுவராண்டு 2043 அன்றுதான் பிறக்கிறது.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தை
முதல் நாள் உழவர் திருநாளான பொங்கலும், தை 2-ம் நாள் திருவள்ளுவர் தினம்
எனப்படும் மாட்டுப் பொங்கலும்,அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கலும்
கொண்டாடப்படுகிறது.
தமிழர் கலாச்சாரப்படி மிகப்பெரிய முக்கியமான திருவிழா இதுவே. இந்த தமிழர்
திருநாளுக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா மற்றும் அரசியல்
தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ரோசய்யா விடுத்துள்ள வாழ்த்து:
"இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் அறுவடை
தீருவிழாவான பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்களை
தெரிவித்து கொள்கிறேன். இந்த திருவிழாக்கள் மக்களிடம் ஒற்றுமை,
நல்லிணக்கம், அமைதி மற்றும் செல்வ செழிப்பை உருவாக்கட்டும்."
முதல்வர் ஜெயலலிதா:
புதுப் பானையில் பொங்கும் பொங்கல் போன்று நம் மனதில் நல்லெண்ணங்கள்
பொங்கட்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல்
திருநாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்களைத்தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
புதுப்பானையில் அரிசியிட்டு பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சிக் குரல்
எழுப்பி இறைவனை வணங்கி அனைவரும் ஒன்று பட்டு, வேற்றுமைகளை மறந்து உள்ளம்
மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகை ஆகும்.
அச்சமின்மை, மனத்தூய்மை, உண்மை, துணிவு, கருணை போன்ற நல்ல எண்ணங்கள்,
புதுப் பானையில் உள்ள நற்பொங்கல் போன்று நம் உள்ளத்தில் நிறைந்திருந்தால்
நாடு நலமும், வளமும் பெறும். பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது
தெய்வப் பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும்
அயராது பாடுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வப்பண்புள்ளவர்கள்
ஆவார்கள்.
இத்தகைய உழவர் பெருமக்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட பல்வேறு
நலத்திட்டங்கள் எனது தலைமையிலான தமிழக அரசால் தீட்டப்பட்டு சீரிய
முறையில் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. தமிழர் திருநாளாம் இந்த பொங்கல்
திருநாளில் தமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும்,
சிறப்போடும் வாழ இறைவனை வேண்டி என்னுடைய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை
மீண்டும் உரித்தாக்கிக் கொள்கிறேன்," என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி
தமிழக மக்களுக்கு உழவர் திருநாள் வாழ்த்துக்களையும், தை முதல் தேதி
பிறப்பதையொட்டி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்
முன்னாள் முதல்வரும் தி்முக தலைவருமான கருணாநிதி.
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என முன்பு கருணாநிதிஅறிவித்திருந்தார்.
ஜெயலலிதா பதவிக்கு வந்ததும் அந்த அறிவிப்பை ரத்து செய்து சித்திரை 1 தான்
தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றினார்.
ஆனால் திமுகவைப் பொருத்தவரை, தமிழறிஞர்கள் பலரும் ஆய்வு
செய்துவலியுறுத்திய தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதில் உறுதியாக
உள்ளது. எனவே தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர்
திருவிழாவாக அறிவித்து வாழ்த்துக் கூறியுள்ளார் கருணாநிதி.
திருவள்ளுவராண்டு கணக்குப் படி, நாளை பிறக்கும் ஆண்டு 2043 ஆகும்.
விஜயகாந்த்
தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், தனது பொங்கல்
வாழ்த்து செய்தியில், தை பிறக்கும் இந்த நல்லவேளையில் மக்கள் இடர் நீங்கி
நலம் பெற்று வாழ வாழ்த்துவதாகக் கூறியுள்ளார். முன்னதாக அவர் தனது
அலுவலகத்தில் தொண்டர்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார்.
ஞானதேசிகன்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன்,"தானே புயலால்
பாதிக்கப்பட்டிருக்கின்ற விவசாய நண்பர்களை நினைத்துப் பார்த்து,
அவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்வோம், அவர்களின்துயர் துடைப்பில்
ஈடுபடுவோம்," என்று பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சி
தமிழ், தமிழர்கள், தமிழகம் அனைத்துத் துறைகளிலும், நிலைகளிலும் மேம்பட
தொடர்ந்து போராட இந்த பொங்கல் நாளில்உறுதியேற்போம் என மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில்
கூறியுள்ளார்.
தா பாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலர் தா.பாண்டியன் தனது பொங்கல்
வாழ்த்தில்,"நிர்வாகத் துறைகளிலும், பொது வாழ்க்கையிலும் ஊழல்களை அகற்றி,
நெறிகளோடு அமைந்த சமூதாயம் அமைந்திட உறுதி ஏற்பதோடு, நமக்குள்ள நீர்
ஆதாரங்கள், ஆறுகள், குளங்கள், ஏரிகளை, அழிய விடாமலும், புதுப்பித்தும்
காத்திட முயல்வோம். தமிழ் மக்கள் அண்டை நாடான இலங்கையில் பட்டுவரும்
துயரங்களைத் துடைக்க தொடர்ந்து பணிகளை ஆற்றுவோம்.
தமிழ்நாட்டின் அடிப்படை நலன்கள், உரிமைகளைக் காத்திட ஒன்றுபட்டுப்
பணிபுரிவோம். பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளோர் தம் வாழ்வில் மக்களுக்கு வழி
காட்டும் வகையில் நேர்மையைக் கடைப்பிடித்து ஒழுக முயல வேண்டும். எதை
இழக்க நேரிடினும், நம் முன்னோர் பதித்துள்ள பண்பாட்டைக் காத்து நிற்க,
பொங்கல் திருநாளில் உறுதியேற்க கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேண்டி
நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்," என்று கூறியுள்ளார்.
Tags: வாழ்த்து
Other articles
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger