எல்லாம் நல்ல படியாக முடிந்தால் கூடங்குளத்தில் மூன்றே மாதங்களின் மின்உற்பத்தி தொடங்கும்,'' என்று இந்திய அணுமின்கழக தலைவரும், இந்திய அணு சக்தி துறையின் செயலாளருமான டாக்டர் ஸ்ரீகுமார் பானர்ஜி கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் என்.ஐ. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உலக பேரிடர் மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை கருத்தரங்கை தொடங்கி வைத்து அவர் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கிய போதே அதன் கட்டிட அமைப்பு, ரியாக்டரின் தரம், மக்களின் வாழ்வாதாரம் இதையெல்லாம் நன்கு பரிசோதித்த பின்னரே பணிகள் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் தோரியம் அதிக அளவில் கிடைக்கிறது. எதிர்காலத்தில் இதை கூடங்குளத்துக்கு பயன்படுத்த முடியும். கூடங்குளம் திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்த திட்டம். இங்கு கதிரியக்கம் குறைந்த அளவில்தான் உள்ளது. காற்றில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் உள்ளூரில் விளக்கு எரிப்பதற்கும், தண்ணீர் பம்புகளுக்கும் பயன்படுத்தலாம். அனல் மின்சாரத்துக்கு எரிபொருள் அதிக அளவில் தேவைப்படுகிறது. பெரிய திட்டங்களுக்கும், மத்திய தொகுப்புக்கு மின்சாரம் வழங்கவும் அணுமின்நிலையம் தேவை.
ஒரு நாட்டின் அடிப்படை பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம் முக்கிய தேவை. தமிழ்நாட்டில் இன்று அதிக அளவில் மின்வெட்டு இருக்கிறது. அதுவும் மிகக்குறைந்த அழுத்தமுடைய மின்சாரம்தான் சப்ளை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு தேவையான 700 மெகாவாட் மின்சாரம் இங்கிருந்து கிடைக்கும். இந்தியாவில் 40 சதவீதம் மக்கள் மின்சாரத்தை பயன்படுத்தவில்லை. கூடங்குளம் திட்டத்தை பொறுத்த வரை இது லாப நோக்கில் தொடங்கப்பட்ட திட்டம் அல்ல. மக்களின் தேவைக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட திட்டம். வளர்ந்த நாடான ஜெர்மனி இன்று பிரான்சிடம் மின்சாரம் கடனாக பெறுகிறது. அமெரிக்கா இருக்கும் அணுமின் உலைகளின் ரியாக்டர் செயல்படும் காலஅளவை நீட்டித்துக்கொண்டிருக்கிறது.
கூடங்குளம் அணுமின்நிலையம் உலகிலேயே அதிக பாõதுகாப்பு வசதிகளை கொண்டது. கடற்கரையில் இருந்து 1.2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு பயன்படுத்தும் நீர் திரும்ப கடலுக்கு செல்வதால் மீன்வளம் பாதிக்கப்பட மாட்டாது. தாராபுரம், கல்பாக்கம் போன்ற இடங்களில் அணுமின்நிலையம் அமைந்த பின்னர் அந்த பகுதி அதிகமான வளர்ச்சி கண்டுள்ளது. அதுபோல கூடங்குளம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு அப்பகுதி வளர்ச்சி பெறும். கூடங்குளம் அணுமின்நிலையத்தில் சோதனை முடிந்துள்ளது. தண்ணீர் கூலிங் செய்யப்பட்டு வெளியேற்றும் சோதனையும் முடிந்துள்ளது. இனி யுரேனியம் லோடிங் செய்ய வேண்டும். எல்லாம் நல்ல படியாக முடிந்தால் மூன்று மாதங்களில் கூடங்குளத்தில் அணுமின் உற்பத்தி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு உங்கள் அட்வைஸ் என்ன? என்று நிருபர்கள் கேட்ட போது, மக்களை திசைதிருப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
Post a Comment