முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை தீர்க்க கேரள பகுதியில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, உறுமண்சோலை ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க வேண்டும் என கேரள அரசு தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தொடரும் வழக்குகளை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து வருவது வரவேற்கத்தக்கது.
1956ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன்பு முல்லைப் பெரியாறு அணை தமிழகத்தில்தான் இருந்தது. ஆனால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மாநில எல்லைக்குழு உறுப்பினராக கேரளாவை சேர்ந்த டி.என். பணிக்கர் இருந்தார். அவருக்கு சொந்தமான சொத்துக்கள் இடுக்கி மாவட்டத்தில் இருந்தன.
அவை தமிழக பகுதிக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக அந்த பகுதிகளை கேரள மாநிலத்துடன் இணைத்துவிட்டார். அப்போது தமிழர்கள் அதிகம் வாழும் இந்த 3 பகுதிகளையும் தமிழகத்துடன் இணைத்திருந்தால் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் ஏற்பட்டிருக்காது. அந்த பகுதி மக்கள் தற்போது தமிழகத்துடன் இணைய வேண்டும் என போராடி வருகிறார்கள்.
இதனால் இந்தபபிரச்சனைக்கு ஒரே தீர்வு முல்லைப் பெரியாறு அணை பகுதியில் அமைந்துள்ள தேவிகுளம், பீர்மேடு, உறுமண்சோலை ஆகிய வட்டங்களை மீண்டும் தமிழகத்துடன் இணைப்பதுதான். இது தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இந்த பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என தமிழக எம்.பிக்கள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வற்புறுத்தி உள்ளனர்.
2006ம் ஆண்டு ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது, அவரால் முன்வைக்கப்பட்ட விவாதங்களை ஏற்றுக்கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வந்த போது தமிழகத்தில் திமுக தான் ஆட்சி நடத்தியது.
அப்போது திமுக அரசு நினைத்திருந்தால் அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தி இருக்கலாம். ஆனால் கருணாநிதிக்கு மட்டுமே தெரிந்த காரணத்தினால் அணையின் நீர் மட்டத்தை உயர்த்தவில்லை.
தமிழகத்தின் ஆற்று நீர் பிரச்சனைகளில், முல்லைப் பெரியாறு, பாலாறு, காவேரி ஆகிய நதிகளின் உரிமை பிரச்சனைகளில் தமிழக மக்களுக்கு திராவிட கட்சிகள் செய்த துரோகம் மன்னிக்க முடியாதது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அனைத்து அணைகளிலும் ராணுவத்தினரை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என கூறியுள்ளது நல்ல யோசனைதான்.
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கேரள அரசிற்கு பொருளாதார தடை ஏற்படும் அளவிற்கு தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்லும் 10 வழிகளையும் ஒரு வாரத்திற்கு மூட வேண்டும். இதனையும் சட்டசபை தீர்மானத்தில் நிறைவேற்றினால் நல்லதுதான். அப்போதுதான் கேரள மக்களுக்கு உண்மை நிலை புரியும்.
சகோதர மாநிலங்கள் என கூறி பிரச்சனைகளை கருணாநிதி தட்டி கழித்து வந்தார். ஆனால் அவர்கள் தமிழகத்தை சகோதர மாநிலமாக நினைக்கவில்லை.
இந்தப் பிரச்சனையில் தேனி மாவட்டத்தில் தினந்தோறும் 50,000, 1 லட்சம் என மக்கள் வீராவேசத்தோடு தன்னிச்சையாக போராடி வருவது ஒவ்வொரு தமிழனையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. எந்த அரசியல் கட்சிகள் அமைப்புகளின் தூண்டுதல் இல்லாமல் தமிழக மக்கள் தன்னிச்சையாக நடத்தும் இந்தப் போராட்டம் தமிழக வரலாற்றில் பதிவாகும் என்றார் ராமதாஸ்.
Post a Comment