திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டீஸ்வரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நடிகர் வடிவேலுவிடம் எனது கணவர் வேலுச்சாமி மானேஜராக வேலை பார்த்தார். கடந்த 4.2.2009-ல் வேலுச்சாமி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வடிவேலு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வடபழனி போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். எனது கணவரை வடிவேலு கொலை செய்து இருக்கலாம் என சந்தேகப்படுகிறேன்.
கடந்த ஆட்சியில் தி.மு.க. தலைவர்களிடம் வடிவேலு நெருக்கமாக இருந்தார். இதனால் அவருக்கு எதிராக என்னால் புகார் கொடுக்க முடியவில்லை. 19.8.2011-ல் எனது கணவர் சாவு குறித்து சந்தேகம் எழுப்பி போலீஸ் டி.ஜி. பி.யிடம் புகார் மனு அளித்தேன். அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு இரு மகன்கள் உள்ளனர். எங்களுக்கு மிரட்டல்கள் வருகிறது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனது கணவர் சாவு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு நீதிபதி பால்வசந்தகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாண்டீஸ்வரி சார்பில் வக்கீல் மணிகண்டன் ஆஜராகி வாதாடும் போது நடிகர் ராஜ்கிரணிடம் வடிவேலுவை அறிமுகம் செய்து வைத்தது வேலுச்சாமிதான். முதலில் வேலுச்சாமி ராஜ்கிரணிடம் கணக்கு பிள்ளையாக இருந்தார். பிறகு வடிவேலுக்கு மானேஜரானார்.
நில மோசடி பிரச்சினை எழுந்த போது வேலுச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதில் சந்தேகம் எழுகிறது. இந்த சாவு குறித்து பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். இது வரை கோர்ட்டுக்கு அனுப்பப்படவில்லை என்றார். இதையடுத்து பாண்டீஸ்வரி புகார் மனு குறித்து 1 வாரத்தில் விளக்கம் அளிக்கும்படி போலீஸ் டி.ஜி.பிக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
Post a Comment