சேலம் உத்தம சோழபுரத்தில் தனியார் மேலாண்மை கல்லூரி உள்ளது. இங்கு ராமகிருஷ்ணன் (23) என்ற மாணவர் எம்.பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார். இவரது சொந்த ஊர் தாரமங்கலம் அத்திக்கட்டானூர். தந்தை பெயர் சீனி வாசன்.
நேற்று காலை மாணவர் ராமகிருஷ்ணன் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால் கல்லூரிக்கு வரவில்லை. இதுபற்றி மற்ற மாணவர்கள் அவரது தந்தைக்கு போன் செய்து கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மகன் எங்கே என்று தேடினார்.
நேற்று பகலில் அத்திக்கட்டானூர் ஏரி பகுதியில் தேடிய போது அங்கு கரையில் மாணவர் ராமகிருஷ்ணனின் சட்டை, பேண்ட் கிடந்தது. சட்டைப்பையில் இருந்த அவரது செல்போன் ஒலித்தவாறு இருந்தது. இதைப்பார்த்த பஞ்சாயத்து தலைவர் மோகன் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். ஏரிக்குள் மாணவர் பிணம் இருக்கிறதா? என்று மீன்பிடி தொழிலாளர்களும், தீயணைப்பு படையினரும் தேடினார்கள். ஒரு மணி நேரத்துக்குப்பின் மாணவர் ராமகிருஷ்ணன் பிணம் மீட்கப்பட்டது.
இவரது கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. ஒரு கண் கம்பியால் குத்தி நெம்பியது போல் இருந்தது. எனவே அவரை யாரோ கை-கால்களை கட்டியும் கண்ணை தோண்டியும் கொடூரமாக கொலை செய்து ஏரியில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். அவரது உடலில் வேறு ஏதும் காயம் இருக்கிறதா? என்பது பற்றி அறிய பிரேத பரிசோதனைக்கு பிணம் அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசார் மர்ம சாவு என வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் கொலை வழக்காக மாற்றப்படும். மாணவர் ராமகிருஷ்ணன் எப்படிப்பட்டவர் என்று அவருடன் படிக்கும் மற்ற மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சில நாட்களுக்கு முன்பு வகுப்பில் பாடம் நடத்திய பேராசிரியை ஒருவரை பின்பக்கமாக செல்போனில் ஆபாச படம் எடுத்து அந்த படத்தை மற்ற மாணவர்களுக்கு அனுப்பினார். அந்த படத்தை இன்டர்நெட் பேஸ்புக்கிலும் வெளியிட்டார்.
இந்த தகவலை கேட்ட பேராசிரியை அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கல்லூரி முதல்வர் மற்றும் இதர பேராசிரியர்களிடம் கூறினர். அவர்கள் மாணவர் ராமகிருஷ்ணனை கண்டித்தனர். பெற்றோரை அழைத்து வருமாறு கூறினர்.
அதன் பிறகு மாணவர் ராமகிருஷ்ணன் மற்ற மாணவர்களுக்கு தனது செல்போனில் இருந்து மெசேஜ் ஒன்று அனுப்பி உள்ளார். அதில் அவர் "டேய் நான் போலீசுக்கு போறேண்டா, அவனுங்க ஓவரா டார்ச்சர் பண்ணுவானுங்க" என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் மாணவர் கொலை செய்யப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Post a Comment