News Update :
Home » » தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் நினைவுநாள்: திரையுலகினர் புறக்கணித்த பரிதாபம்

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் நினைவுநாள்: திரையுலகினர் புறக்கணித்த பரிதாபம்

Penulis : karthik on Tuesday 1 November 2011 | 23:27

திருச்சி: தமிழ் திரையுலகின், "முதல் சூப்பர் ஸ்டார்' என, வர்ணிக்கப்படும் எம்.கே. தியாகராஜ பாகவதர் நினைவு நாளை அனுசரிக்க திரையுலகினர் யாரும் வராததது, அவரது குடும்பத்தாருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி, பாலக்கரை, எடத்தெரு, கான்மியான் மேட்டுத்தெருவில் வசித்த கிருஷ்ணமூர்த்தி ஆச்சாரியார் - மாணிக்கத்தம்மாள் தம்பதிக்கு, 1910 மார்ச் 1ம் தேதி எம்.கே. தியாகராஜ பாகவதர் பிறந்தார். அப்பகுதியில் உள்ள ஜெபமாலை மாதா துவக்கப்பள்ளியில், 5ம் வகுப்பு வரை படித்த அவர், நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். பின்னர், 1934ம் ஆண்டு பவளக்கொடி என்னும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். நவீன சாரங்கதாரா, அம்பிகாபதி, திருநீலகண்டர், சிவகவி, ஹரிதாஸ், அசோக்குமார், ராஜமுக்தி உள்பட, 14 படங்களில் நடித்து பிரபலமானார்.


இன்றைய காலகட்டத்தில், ஒரு படம் 10 நாட்கள் தியேட்டரின் முழு கொள்ளளவுடன் ஓடினாலே வெற்றிப்படம் என கூறி வரும் நிலையில், தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்றும் வர்ணிக்கப்படும் தியாகராஜ பாகவதர் நடித்த, ஹரிதாஸ் என்ற படம் 4 தீபாவளிகளையும் தாண்டி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. இதன் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற தியாகராஜ பாகவதர், உடல் நலக்குறைவால், 1959ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இறந்தார். திருச்சியின் மற்றொரு மைந்தனாக திரையுலகில் வலம் வந்த எம்.ஆர். ராதா ஏற்பாட்டில், தியாகராஜ பாகவதர் உடல் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு, மக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஊர்வலத்துடன் அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டு திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை ரோடு அருகேயுள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.


இந்நிலையில், தியாகராஜபாகவதரின், 53வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. தியாகராஜ பாகவதரின் சின்னம்மா சம்பூரணத்தம்மாளின் மகள் ஆனந்தலட்சுமி, அவரது கணவர் தெட்சிணாமூர்த்தி, இவர்களது மகன் தனபால் ஆகியோர் பாகவதர் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த நேற்று வந்தனர். கடந்த 1948ம் ஆண்டு தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான ராஜமுத்தி சினிமாவில் இடம் பெற்ற, "மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ' என்ற பாடலை உரக்கப் பாடி அவரது கல்லறையில் அஞ்சலி செலுத்தினர். தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் நினைவுநாளை அனுசரிக்கக்கூட திரையுலகிலிருந்து, ரசிகர்கள் யாரும் வராதது, அவரது குடும்பத்தாருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger