சென்னை:"சென்னையில் படிக்கும் மாணவர்கள் எங்களை விட புத்திசாலிகளாக இருக்கின்றனர். ஆசிரியர்-மாணவர்கள் இடையே அதிகளவில் கலந்துரையாடல் நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்று, சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த மாணவியர் கருத்து தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் உள்ள, "பார்ட்லே செகண்டரி பள்ளி'யைச் சேர்ந்த 6 மாணவர்கள், 6 மாணவியர், தமிழ் இலக்கியம், செய்யுள் ஆகியவற்றை கற்பதுடன், தமிழ் மொழியில் சரளமாக கலந்துரையாடுவதற்காக, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளிக்கு, கல்விச் சுற்றுலாவாக வந்துள்ளனர். இந்த பள்ளியில் படித்து, சிங்கப்பூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரியும் லூயிஸ் ஐசக் குமார் தலைமையில், இந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழு, சென்னை வந்துள்ளது.கிறிஸ்தவக் கல்லூரி பள்ளியில், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்குச் சென்று தமிழ் பாடத்தை கவனித்தல், இங்குள்ள கலாசாரம், பண்பாடுகள், பாரம்பரிய விளையாட்டுகளை அறிதல், இங்குள்ள கல்வி கற்கும் முறைகளை அறிதல் போன்ற நிகழ்ச்சிகளில், சிங்கப்பூர் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, சிங்கப்பூர் மாணவியர் ஜனனி (9ம் வகுப்பு), பரக்கத் ஈஷா (8ம் வகுப்பு) ஆகியோர் கூறியதாவது:எங்களது பள்ளியில் தமிழை ஒரு பாடமாக படிக்கிறோம். ஆனால், அங்கு இலக்கியம், செய்யுள் போன்றவை கிடையாது. முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் மூலமாகத் தான் கல்வி கற்கிறோம். இங்குள்ள கல்வி முறையை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆசிரியர்-மாணவர்களிடையே நெருக்கமான நட்பும், கலந்துரையாடலும் இருக்கிறது. அங்கே இதற்கெல்லாம் நேரம் இல்லை.இன்று (நேற்று) எங்களுக்கு, "காவடிச் சிந்து' கற்றுக் கொடுத்தார்கள். கடினமான சொற்களை மாணவர்கள் பயன்படுத்துவார்களோ என்று பயந்தோம். ஆனால், மிக எளிமையான சொற்களில் பேசுகின்றனர். இங்குள்ள மாணவர்களுடன் நாங்கள் பேசிய போது, எங்களை விட அவர்கள் புத்திசாலிகளாக இருப்பதை தெரிந்து கொண்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சங்கர் கூறும்போது,"பார்ட்லே' செகண்டரி பள்ளி, அரசு பள்ளியாகும். மாணவர்கள், தமிழ் மொழியைப் பற்றியும், பண்பாடு, கலாசாரத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, 80 சதவீதம் நிதியுதவி செய்து, சென்னைக்கு அனுப்பியுள்ளனர். மூன்றாம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, அதன் பின் சிங்கப்பூர் செல்கின்றனர்' என்றார்.
Post a Comment