முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் போக்கால் போராட்டம் வெடிக்கும் என்று தான் கடந்த 10 ஆண்டுகளாக சொன்னது தான் நடந்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை கேரள அரசு கையாளும் விதத்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று நான் கடந்த 10 ஆண்டுகளாக கூறி வந்தது தான் நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் தற்போது தன்னெழுச்சியான பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழக அரசின் தற்போதைய நிலைப்பாட்டை வரவேற்கிறேன். அதிலும் குறிப்பாக அணை பிரச்சனையில் இரு மாநிலங்களுக்கிடையே மத்திய அரசு ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற தமிழக அரசின் முடிவு பாராட்டுக்குரியது. வரும் 21ம் தேதிதமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்களை மதிமுக சார்பில் தடுத்து நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என்றார்.
கடந்த 2008ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மதிமுக சார்பில் நடந்த கருத்தரங்கில் வைகோ இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு சென்னை மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணை வரும் ஜனவரி மாதம் 2வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Post a Comment