நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் டைரக்டர் சீமான் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்று உத்தரவிட்டு உள்ளதே அந்த அணை பலமாக உள்ளதை காட்டுகிறது.
ஆனால் கேரள அரசும் அங்குள்ள கட்சிகளும் சுயலாபத்துக்காக முல்லைபெரியாறு அணை பிரச்சினையை கிளப்பி உள்ளனர். கேரள அரசும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்துக்கு தரவேண்டிய நீரையும் தரமறுக்கிறது.
முல்லைப்பெரியாறு அணை தமிழர்களால் தமிழ்நாட்டுக்காக கட்டப்பட்டது ஆகும். ஆனால் கேரள அரசு நமது உரிமையில் தலையிட்டு அதுவும் உரிமை கொண்டாடுகிறது.
கேரள அரசு புதிதாக அணை கட்ட வேண்டும் என்றால் இப்போது உள்ள அணைக்கு உள்பக்கமாக கட்டிக் கொள்ளலாம் வெளிப்பக்கமாக அல்ல. முல்லைபெரியாறு அணை பிரச்சினையில் தமிழக அரசின் அணுகுமுறை சரியாக உள்ளது.
ராஜபக்சே போர்குற்றவாளி என்று தமிழகத்தில் அனைவரும் கூறி வந்தனர். மேலும் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய போது மத்திய அரசு கூடங்குளம் பிரச்சினையை ஆரம்பித்து மக்களை திசை திருப்பியது. தற்போது கூடங்குளம் பிரச்சினை பேரியதானவுடன் முல்லைபெரியாறு அணை பிரச்சினையை தூக்கி விட்டு கூடங்குளம் பிரச்சினையை திசை திருப்புகிறது.
கேரள மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி செய்வதால் அவர்களால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும். தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு அதிக அளவு மின்சாரம் வழங்கப்படுவதால் தமிழகம் 8 மணி நேரம் இருளில் மூழ்குகிறது.
முல்லைபெரியாறு பிரச்சினையில் மத்திய அரசு தீர்வு காணவும் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரியும் வருகிற 17-ந்தேதி ஆண்டிப்பட்டியில் இருந்து தேனிக்கு பேரணியாக செல்ல உள்ளோம்.
இவ்வாறு சீமான் கூறினார்.
Post a Comment