மலையாள நடிகையான ஆசின், கோச்சடையான் படத்தில் நடிக்கக் கூடாது. மீறி நடிக்க வைத்தால் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி மிரட்டியுள்ளது.
ரஜினி நடிக்க கோச்சடையான் என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. ரஜினியின் மகள் செளந்தர்யா இயக்குகிறார். இதில் ஜோடியாக நடிக்க யாரைப் போடலாம் என்று பெரிய டிஸ்கஷனே நடக்கிறதாம். சினேகாவைத் தங்கையாக நடிக்க வைக்கவுள்ளனர் என்று தகவல்கள் கூறின.
அதேசமயம், ஹீரோயினாக நடிக்க ஆசினை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது ஆசினை நடிக்க வைக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் கண்ணன் கூறுகையில், நடிகை ஆசின், தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் இலங்கை சென்று வந்தார். அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரை தமிழ் சினிமாப் படங்களில் நடிக்க அனுமதிக்கக் கூடாது என்று கோரப்பட்டது. ஆனால் நடிகர் சங்கம் குறுக்கிட்டுப் பஞ்சாயத்துப் பேசி அமைதியாக்கி விட்டது.
தற்போது முல்லைப்பெரியாறு பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் மலையாள நடிகையான ஆசினை ரஜினி ஜோடியாக்க கூடாது. மீறி செய்தால் படப்பிடிப்புகளில் போராட்டம் நடத்துவோம். ரஜினி வீட்டிலும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தார்.
இதனால் ஆசினை கோச்சடையான் ஹீரோயினாக்க சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது. ரஜினியின் தங்கையாக சினேகா நடிக்கவிருப்பதால் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை அனுஷ்கா தயங்கியதைத் தொடர்நதே ஆசினை கோச்சடையான் குழு அணுகியதாக ஒரு தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment