சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் (வயது 33) மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 6 கிரவுண்டு நிலத்தை அபகரித்து கொண்டதாக என் மீது என்.எஸ்.சேஷாத்திரிகுமார் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலத்தை அபகரித்ததில் சுபாரெட்டி, ராஜாசங்கர், சீனிவாசன் ஆகியோர் மிரட்டல் விடுத்ததாகவும், துணை பதிவாளரை புகார்தாரரின் வீட்டுக்கு அழைத்து வந்து அந்த நிலத்தை வேணுகோபால் ரெட்டி என்பவருக்கு விற்பனை செய்ய வற்புறுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில விற்பனை தொடர்பாக என் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பொய்ப்புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் என்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கும் நில விற்பனைக்கும், எனக்கும் தொடர்பு கிடையாது.
நான் நிரபராதி. புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். அதற்கு விதிக்கப்படும் எந்த நிபந்தனையையும் பின்பற்ற தயார் என்று அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு இதுபோன்ற மனுவை தியாகராயநகர் திருமூர்த்திநகரைச் சேர்ந்த ராஜாசங்கரும் (53) தாக்கல் செய்துள்ளார்.
நீதிபதி பழனிவேலு முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் எஸ்.ராமசாமி, குமரேசன், முனியப்பராஜ், சரவணன் ஆகியோர் ஆஜரானார்கள்.
அரசுத் தரப்பில் தலைமை குற்றவியல் வக்கீல் ஐ.சுப்பிரமணியன் ஆஜரானார். விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதாலும், சாட்சிகளை அவர்கள் கலைத்துவிடக்கூடும் என்பதாலும் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று அவர் வாதிட்டார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:
இந்த வழக்கில் சாட்சி, ஆதாரங்களை மனுதாரர்கள் கலைத்துவிடுவார்கள் என்று கூற முடியாது. எனவே இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறேன்.
ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் அளித்து அவர்கள் முன்ஜாமீன் பெறலாம். அதன் பிறகு 4 வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட போலீசில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பின்னர் தேவைப்படும்போது போலீசார் முன்பு ஆஜராக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment