கணவனை, மனைவி ஒருத்தி பிரிந்தால், எப்படி கஷ்டப்படுவார் என்று ஸ்ரீ ராமராஜ்யம் படத்தில் சீதையாக நடித்தபோது தான் உணர்ந்தேன் என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். விரைவில் பிரபுதேவாவை மணம் முடிக்க இருக்கும் நயன்தாரா, கடைசியாக தெலுங்கில் நடித்துள்ள படம் ஸ்ரீ ராமராஜ்யம். ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு, ஜோடியாக சீதை வேடத்தில் நடித்து இருந்தார் நயன்தாரா. கடந்த 18ம் தேதி, நயன்தாரா பிறந்தநாளில் இப்படம் ரிலீசானது. இந்தப் பட அனுபவம் தன்னை மனதளவில் பெரிய மாற்றத்துக்குள்ளாக்கியிருப்பதாக நயன்தாரா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஸ்ரீ ராமராஜ்யம் படத்தை கடந்த 18ம் தேதி என்னுடைய பிறந்தநாளில் பார்த்தேன். படம் நன்றாக வந்திருக்கிறது. இதை என்னுடைய பிறந்தநாள் பரிசாக கருதுகிறேன். முதலில் இந்தபடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, நம்மால் நடிக்க முடியுமா என்று பயந்தேன். பின்னர் டைரக்டர் எனக்கு, முழு சுதந்திரத்தை கொடுத்து நடிக்க வைத்தார்.
படத்தின் சூட்டிங் தொடங்கியதில் இருந்தே அசைவ உணவு வகைகளை தவிர்த்தேன். விரதம் இருந்தேன், தினமும் கோவிலுக்கு சென்றேன். மொத்தத்தில் சீதையாகவே வாழ்ந்தேன். சீதையாக நடித்த போது தான், கணவனை இழந்த மனைவியின் கஷ்டம் என்ன என்பதை உணர்ந்தேன். இப்படி ஒரு படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
Post a Comment