மும்பை:
மும்பை டெஸ்டில் டேரன் பிராவோ சதம் அடிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி இமாலய ஸ்கோரை எட்டியது. இந்திய பவுலர்கள் விரைவாக விக்கெட் வீழ்த்த முடியாமல், ஏமாற்றினர். வேகப்பந்து வீச்சில் வருண் ஆரோன் எழுச்சி கண்டது, ஆறுதலாக அமைந்தது.இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரை 2-0 என வென்றது. முக்கியத்துவம் இல்லாத கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில், 2 விக்கெட்டுக்கு 267 ரன்கள் எடுத்திருந்தது.
பிராவோ சதம்:
நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. வருண் ஆரோனின் முதல் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் அடித்த பிராவோ, டெஸ்ட் அரங்கில் 1000வது ரன்களை (23 இன்னிங்ஸ்) கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்த நிலையில், 86 ரன்கள் எடுத்த கிர்க் எட்வர்ட்ஸ் வெளியேறினார்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராவோ, சர்வதேச டெஸ்ட் அரங்கில் 3வது சதம் கடந்து அசத்தினார். இது இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து இரண்டாவது சதம்.
பாவெல் அபாரம்:
சந்தர்பால் காயம் காரணமாக வாய்ப்பு பெற்ற பாவெல், துவக்கத்தில் வேகமாக ரன்கள் சேர்த்தார். போகப் போக நிதானத்துக்கு மாறிய இவரும், தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க சேவக், சச்சின், அஷ்வின் என, மாறி, மாறி பவுலிங் செய்தும் முடியவில்லை.
நான்காவது விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்த போது, ஒருவழியாக ஓஜா சுழலில் பாவெல் (81) வீழ்ந்தார்.
ஆரோன் அசத்தல்:
பின் பிராவோவுடன் இணைந்த சாமுவேல்சும், அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்களுக்கு ஆடுகளமும் சாதகமாக அமைய, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர், எளிதாக 500 ஐ கடந்தது. இந்நிலையில் பவுலிங் செய்ய வந்த வருண் ஆரோன், திருப்பம் ஏற்படுத்தினார்.
முதலில் 166 ரன்கள் எடுத்திருந்த பிராவோ, இவரிடம் வீழ்ந்தார். தனது அடுத்த ஓவரில் கார்ல்டனை (4) அவுட்டாக்கினார். பின் கேப்டன் சமியையும் (3)வெளியேற்றினார்.
அஷ்வின் ஆறுதல்:
கடைசி நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆறாவது பேட்ஸ்மேனான சாமுவேல்சும், அரைசதம் கடந்தார். அஷ்வின் சுழலில் ராம்பால் (10), சாமுவேல்ஸ்(61)சிக்கினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 575 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா சார்பில் அஷ்வின் 4, வருண் ஆரோன் 3 விக்கெட் வீழ்த்தினர்.
கவனம் தேவை:
ஆடுகளம் இன்னும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ள நிலையில், இந்திய வீரர்கள் இன்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பதிலடி தரலாம். தவறினால் இந்திய அணிக்கு பெரும் சிக்கல் ஏற்படலாம்.
--
இரண்டாவது முறையாக...
டெஸ்ட் வரலாற்றில் நேற்று இரண்டாவது முறையாக டாப்-6 வீரர்கள் (வெஸ்ட் இண்டீஸ்) அனைவரும் 60 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்து சாதித்தனர். இதற்கு முன் 1998, கோல்கட்டா டெஸ்டில் (ஆஸி.,) இந்திய டாப்-6 வீரர்கள் லட்சுமண் (95), சித்து (97), டிராவிட் (86), சச்சின் (79), அசார் (163), கங்குலி (65) ஆகியோர் 60 ரன்களுக்கும் மேல் எடுத்து அசத்தினர்.
* டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் டாப்-6 பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்து அசத்தியுள்ளனர். இதற்கு முன் 1989, 2006 தொடரில் பாகிஸ்தான் வீரர்கள், இந்தியாவுக்கு எதிராக இச்சாதனை படைத்தனர். தவிர, உலகளவில் இது ஐந்தாவது முறையாகும்.
* கடந்த 2009ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து இரு இன்னிங்சில் 749, 544ரன்கள் எடுத்தது. இதற்குப் பின் இப்போது தான் அடுத்தடுத்து கோல்கட்டா (463), மும்பை (575/9) டெஸ்டில் 400க்கும் மேல் எடுத்துள்ளது.
* கடந்த 1990க்கு பின் அந்நிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் (575/9) அணி அதிக ரன்கள் எடுப்பது இது தான் முதன் முறை. இதற்கு முன் 2005ல் 512 (தென் ஆப்ரிக்கா), 2010ல் 559(இலங்கை) ரன்கள் எடுத்துள்ளது.
---
ஜூனியர் லாரா
வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாராவின் சாதனையை விரட்டுகிறார் டேரன் பிராவோ. இவரது பேட்டிங் ஸ்டைலை லாராவோடு ஒப்பிடுவதுண்டு. இருவரும் உறவினர்கள். தவிர, இடது கை பேட்ஸ்மேன்கள். 12வது டெஸ்ட் முடிவில் இருவரும் 941 ரன்கள் எடுத்தனர்.
நேற்றும் லாராவின் சாதனையை சமன் செய்ய வாய்ப்பு இருந்தது. அதாவது 13வது டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக லாரா 167 ரன்கள் எடுத்திருந்தார். இதனை ஒரு ரன்னில் தவற விட்ட பிராவோ, 166 ரன்களில் வெளியேறினார். தவிர 13வது டெஸ்டில் லாரா 1,108 ரன்கள் எடுத்திருந்தார். இதனை ஒரு ரன்னில் நழுவ விட்டார். தற்போது பிராவோ 13 டெஸ்டில் 1, 107 ரன்கள் எடுத்துள்ளார்.
இது குறித்து பிராவோ கூறுகையில்,ஒரு ரன் கூடுதலாக எடுத்திருந்தால், லாராவின் சாதனையை சமன் செய்திருக்கலாம். ஆனாலும், இதனை மனதில் வைத்து விளையாடவில்லை. இதற்கான திட்டமும் வகுக்கவில்லை. நீண்ட நேரம் களத்தில் இருந்த சோர்வு காரணமாகவே அவுட்டாக நேர்ந்தது,என்றார்.
Post a Comment