2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நவம்பர் 11ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட் அறிவித்திருப்பதால் இனி கனிமொழி உள்ளிட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட யாருக்குமே ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கனிமொழி. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ராசாவைத் தவிர மற்ற அத்தனை பேருமே ஜாமீன் கோரி கோர்ட்டுகளை நாடி விட்டனர்.யாருக்குமே இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மேலும் துயரமாக, ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது நம்பிக்கை துரோக குற்றச்சாட்டை சுமத்தியது சிபிஐ. இதனால் இவர்களுக்கு ஜாமீன் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் கனிமொழி ஜாமீன் கோரினால் அதை ஆட்சேபிக்க மாட்டோம் என்று சிபிஐ திடீரென அறிவித்தது.
திமுக தலைவர் கருணாநிதி டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசிய பின்னர் இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து உச்சநீதிமன்றத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டது சிபிஐ. ஏன் இந்த இரட்டை நிலை என்று உச்சநீதிமன்றம் சிபிஐக்கு கிடுக்கிப் பிடி போட்டது.
இந்த நிலையில்தான் இன்று கனிமொழி உள்ளிட்டோரின் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்து விட்டது டெல்லி சிபிஐ கோர்ட். மேலும், இன்று ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி ஷைனி, நவமபர் 11ம் தேதி முதல் வழக்கின் விசாரணை தொடங்கும் என அறிவித்து விட்டார்.
விசாரணை தொடங்கவுள்ளதால் கனிமொழி உள்ளிட்டோருக்கு ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள். ஒரு வேளை கனிமொழி உள்ளிட்டோர் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினால், இதைக் காரணம் காட்டியே, அங்கும் மனு நிராகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனால்தான் கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு தொடர்பாக திமுக கடும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment